தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சிகளில் கரூர் நகராட்சியும் ஒன்று. கடந்த 1874ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி கரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம், வருமான உயர்வு காரணமாக 1969 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1983 ஆண்டில் ஆண்டில் தேர்வுநிலை நகராட்சியாகவும், 1988 ஆம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பேரூராட்சிகள் கடந்த 2004ஆம் ஆண்டு நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, கரூர் நகராட்சியை ஒட்டியிருந்த இனாம் கரூர், தாந்தோணி பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டன. அப்போது கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர், தாந்தோணி நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
அதன்பிறகு கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர், தாந்தோணி நகராட்சிகள் அருகேயுள்ள ஊராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டும் என இரண்டு, மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்துக் கடந்த 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு கரூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றபோது மாநகராட்சி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
நடந்த முடிந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது வாக்குறுதியில் கரூர் நகராட்சி மாநகராட்சியாகும் என வாக்குறுதி அளித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கரூரில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவோம் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் நகராட்சி ஒன்றாவது வார்டு கோதூர் சாலையில் கடந்த ஜூலை 4ஆம் தேதி நடந்த மக்கள் சபைக் கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு பேசும்போது, முதல்வரிடம் கூறி நடப்பாண்டிலேயே கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
.
கரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டு 146 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள்ளது 150ஆவது ஆண்டை நெருங்கி வரும் கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளின் தற்போதைய தோராய மக்கள்தொகை 2.40 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் கரூர் நகராட்சி மாநகராட்சியாக அறிவிப்பு. பள்ளப்பட்டி பேரூராட்சி நகராட்சி எனவும், புஞ்சை புகழூர் மற்றும் டிஎன்பிஎல் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு நகராட்சியாக அறிவிப்பு. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவ ஆங்காங்கே திமுகவினர் மற்றும் பொது மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒரு படி மேலே நாளை நாளிதழுக்கு விளம்பரம் கொடுக்கவும் மாவட்ட திமுக நிர்வாகிகள் தயாராகி விட்டனர். மேலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெம்ப்லேட்டுகளை தயார் செய்து அதனை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். விழுப்புரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக கொடியை நட்ட 13 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களையோ கொடிகம்பங்களையோ நட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனால் பேனருக்கு மாற்றாக சுவரொட்டிகளை ஒட்டுவதில் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக அறிக்கை விடுத்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வால் போஸ்டர்கள் களைகட்டும் என எதிர்ப்பார்க்கலாம்