எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி 4 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்தவர் என்றெல்லாம் அறியப்படும் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றிருப்பது அதிமுகவிற்குள் புதிய புகைச்சலை உருவாக்கியுள்ளது.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கிறாரா எஸ்.பி.வேலுமணி..?

இனி பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட இருந்துவரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அவரது வலது, இடது கரங்களாக அறியப்படுபவர்களே பாஜக கூட்டணிக்கு மீண்டும் அஸ்திவாரம் போடும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக வெளியாகும் தகவலால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகியுள்ளார்.

Continues below advertisement

பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லையென்று எடப்பாடி பழனிசாமி சொன்ன பிறகு, அதிமுகவினர் குறித்து கடுமையாக விமர்சித்தவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி பற்றி கடுமையான வார்த்தைகளில் அண்ணாமலை பேசியிருந்தார். அப்படியிருந்த சூழலில், எஸ்.பி.வேலுமணி அண்ணாமலையை தன்னுடைய மகனின் திருமணத்திற்கு அழைத்திருப்பது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை, ஜெயலலிதா உயிருடன் இருந்து, அவரை இப்படி விமர்சித்தவரை எஸ்.பி.வேலுமணியால், அவரது இல்லத் திருமணத்திற்கு அழைத்திருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஈஷாவில் அமித் ஷாவுடன் – வேலுமணி சந்திப்பு – பேசியது என்ன ?

கடந்த மாத இறுதியில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தனியாக சந்தித்து பேசியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. அப்போது, பாஜகவுடன் கூட்டணி சேருவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்ற கருத்தை அமித் ஷாவிடம் தெரிவித்துள்ள வேலுமணி, பாஜகவோடு மீண்டும் கூட்டணியில் இணைய என்னை போன்ற பல சீனியர்கள் விருப்பத்துடன் – தான் உள்ளனர் என்று கூறியதாக அப்போதே பரபரப்பு தகவல் வெளியானது. இதைக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, பழனிசாமியிடம் சில விஷயங்களை சொல்லச் சொல்லி வேலுமணியை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுடன் இனி கூட்டணி வைத்தால், மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள் என்ற உறுதியுடன் எடப்பாடி பழனிசாமி இருப்பதால், தன் பங்கிற்கு நெருக்கடி கொடுக்க எஸ்.பி.வேலுமணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

திருமணத்தில் வைத்து கூட்டணிக்கு அஸ்திவாரம்

இப்படியான சூழலில், கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றது மட்டுமின்றி, எஸ்.பி.வேலுமணியோடு இணைந்து கூட்டாக புகைப்படமும் எடுத்துள்ளனர். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அதிமுகவை, பாஜக உதவியுடன் வேலுமணி கைப்பற்ற முயற்சித்து வந்ததாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் அடிப்பட்ட நிலையில், இன்றைய திருமண நிகழ்ச்சியில் வைத்து அண்ணாமலையுடன் சில விஷயங்களை வேலுமணி பகிர்ந்துக்கொண்டதாக தெரிகிறது.

அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரே பாஜக தலைவர்களுடன் இப்படி நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டும் தனது இல்லத் திருமணத்திற்கு அவர்களை வழியச் சென்று அழைத்தும்விட்டு, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை அவர் எப்படி பேச முடியும்? என முனுமுக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!