'தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். திருப்போரூர் முருகன் கோவிலில் வழிபாடு செய்து, பின் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு தன்னுடைய முதல் நாள் நடைபயணத்தை தொடங்கினார்.
அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன ?
பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் பேச்சு: இன்று இந்த பயணத்தை தொடங்குவதற்கு காரணம் சமூகநீதி டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள். டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சியோடும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என பிறந்தநாள் வாழ்த்துக்களை மேடையில் தெரிவித்தார். மருத்துவர் ராமதாஸின் கொள்கையை கடைப்பிடித்து நாம் நடப்போம். மருத்துவர் ராமதாஸின் கொள்கையை நிறைவேற்றவே இந்த நடைபயணத்தை தொடங்கி இருப்பதாக அன்புமணி தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு மாவட்டங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது அதனை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. நான் கரை ஆண்டு காலத்தில் செய்யாமல், சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை செயல்படுத்த போகிறார்களாம் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
'சேவை பெரும் உரிமை சட்டத்தை' கொண்டு வந்தால் 15 நாட்களில் இந்த சேவைகள் அனைத்தும் மக்களை வீடு தேடி வரும். ஆனால் திமுக அரசு அந்த சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது. அந்த சட்டம் வந்தால் உங்களுடன் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் எல்லாம் தேவையே கிடையாது.
மக்கள் பணத்தில் விளம்பரம்
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால் அவர்களுக்கான உரிமை அனைத்தும் கிடைத்துவடுமா? ஒரு பக்கம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் அன்று மாலையே அது டாஸ்மாக் மூலமாக அரசாங்கத்திற்கு சென்று விடுகிறது. இன்று பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதற்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. இவற்றையெல்லாம் செய்ய வேண்டிய திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.
விவசாய துறை மைனஸில் வளர்ச்சி
தமிழக மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் விவசாயிகள். நமக்கு சோறு போடும் விவசாயிகள் கடும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி -0.12% என வளர்ச்சி மைனஸில் உள்ளது.. பால்வளம்,மீன்வளம் ஆகியவை மைனஸ் 5.68% இல் உள்ளது. முதலமைச்சர் நான் டெல்டாகாரன் என சட்டமன்றத்தில் பேசுகிறார் ஆனால் விவசாயத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாம் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் நமக்கு சமூக நீதி வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அடித்தட்டில் இருக்கும் சமுதாயங்கள் முன்னேறும். ஆனால் தமிழக முதலமைச்சர் அதனை செய்ய மறுக்கிறார். தமிழக முதல்வர் எனக்கு உரிமை இல்லை என பொய் சொல்லி வருகிறார்.
அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே அரசு ஊழியர்கள் தான் ஆனால் அந்த அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நான்காண்டுகளுக்கு முன்பே அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை கொடுத்திருப்போம்.
இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஆனால் தமிழக அரசு மட்டும் அதனை செய்ய மறுக்கிறது. அரசு ஊழியர்களுக்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது எதற்காக புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, என கேள்வி எழுப்பினார். அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்காகவே அரசு குழு அமைத்துள்ளது என விமர்சனம் செய்தார்.
வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னார்கள். ஆனால் நான்கரை ஆண்டுகளில் இதுவரை 44 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் வேலை கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் 15 ஆயிரம் பேர் தற்காலிக ஊழியர்கள் 29 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என விமர்சனம் செய்தார்.
இன்றைக்கு தமிழகத்தில் ஒரு லட்சம் வகுப்பறைகளில் ஒரு ஆசிரியர் கூட கிடையாது. ஆசிரியரே இல்லாமல் எவ்வாறு தரமான கல்வியை கொடுக்க முடியும்? கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாததால் 8 லட்சம் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு சுதந்திரம் இல்லை
தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட ஏராளமான போதை பொருள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 24 மணி நேரமும் சந்து கடைகள் மூலம் டாஸ்மாக் விற்பனை நடைபெறுகிறது. தமிழக காவல்துறையினர் நல்லவர்கள் ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பார்கள்.
தமிழகத்தில் இன்றைக்கு பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு காரணமாக இருப்பது மது தான் இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழக அரசை நோக்கி எங்களது அடிப்படை உரிமையை செய்து கொடுங்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
ஆட்சி மாற்றத்திற்கான நடைபயணம்
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 70% உள்ளூர் மக்களுக்கு வேலைவய்ப்பு கொடுக்கும் சட்டத்தை கொண்டு வருவோம் என்றார்கள் ஆனால் செய்யவில்லை. இந்த நடைப்பயணம் விளம்பரத்திற்கான நடை பயணம் கிடையாது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நடை பயணம். தமிழக அரசை அகற்ற வேண்டும் என நினைப்பவர்கள் என்னுடன் இணைந்து வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.