அன்புமணி ராமதாஸ் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் துவங்கிய, நடைபயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என பாமக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது"
அன்புமணி ராமதாஸின் நடைப்பயணம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். நேற்று தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1 ஆம் தேதி வரை "தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்" என்கிற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 10 உரிமைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ளார்.
இன்று திருப்போரூரில் தொடங்கிய நடை பயணம் 100-வது நாளில் தர்மபுரியில் நிறைவு பெறுகிறது. திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நடைபயணத்தை தொடங்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசூரங்களை வழங்கினார். அடுத்ததாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் அன்பழகனார், ஓய்வு பெற்ற வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்கம் தலைவர் வைத்தியநாதன், புரட்சி பாரதம் கொள்கை பரப்புச் செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்டர் பங்கேற்றனர். மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார், சதாசிவம் மற்றும் வெங்கடேசன், பாமகவின் வழக்கு மண்டல செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுப்பு என தகவல்
இன்று திருப்போரூர் முடிந்த பிறகு, நாளை செங்கல்பட்டு மற்றும் உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளுக்கு, நடை பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்தநிலையில் அன்புமணியின் நடை பயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது . ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு அன்புமணியின் நடை பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது அனுமதி வழங்கினால், வட மாவட்டங்களில் பதற்றம் ஏற்படும் என ராமதாஸ் தரப்பு டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். எனவே அன்புமணி ராமதாஸின் நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு இருந்தனர். இந்தநிலையில் தான் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாக்கியது.
வழக்கறிஞர் பாலு விளக்கம்
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக வழக்கறிஞர் பாலு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அன்புமணி ராமதாஸின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., அலுவலகம் விளக்கம் அளித்து இருப்பதாகவும் பாலு தெரிவித்துள்ளார்.