தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு ஆரம்ப கட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் ஒன்றாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்தநிலையில் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில், திமுகவை வெளிப்படையாக விமர்சனம் செய்ததை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகள் விஜய் குறித்து பேசுவதை தவிர்க்க தொடங்கினர். 


அம்பேத்கர் குறித்து நூல் வெளியீட்டு விழா 


குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவராக இருக்கக்கூடிய திருமாவளவன் அதை வெளிப்படையாகவே தவிர்த்து வந்தார். இந்தநிலையில் சென்னையில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ளும் வகையில் முதலில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. விஜய் உடன் இணைந்து, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில், திமுக தரப்பு கூறியதால் திருமா விஜயுடன் சேர்ந்து நூல் வெளியீட்டு விழாவில், பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திமுகவிற்கு கோபம்


திமுக கூட்டணியில் முக்கிய பங்காற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திமுகவிற்கு எதிரான அரசியலை கையில் எடுத்து இருக்கும், தவெக உடன் மேடையை பகிர்ந்து கொள்வது திமுக தலைமைக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்தநிலையில் அதை உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 


விஜய் கலந்து கொள்ளும் அழைப்பிதழ்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது கூட, திமுக சொல்லி தான் விசிக செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்திருந்தது. விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கை தலைவராக பார்க்கப்படும் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை, அதுவும் விசிக கட்சி நிர்வாகி வெளியிடும் போது அதில் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 


அம்பேத்கரா ? திமுக கூட்டணியா ?


இந்தநிலையில் நேற்று மரக்காணம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “அம்பேத்கர் எங்களது கொள்கை தலைவர், அவரை ஒரு சிலர் பட்டியலின தலைவராக தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் தேசிய தலைவர், மகாத்மா காந்தியை போன்று அவர் ஒரு தேசிய தலைவர். அவரைக் குறித்து நூல் வெளியிடுவது, இதைவிட மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏதாவது இருக்குமா ? அந்த நிகழ்ச்சியை திருமாவளவன் புறக்கணிக்கிறார் என்றால், அம்பேத்கருக்கு அவர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா ? இது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். நீங்கள் அம்பேத்காரா ? திமுக கூட்டணியா ? என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 


தற்போது அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்து அன்புமணியும் தன் பங்கிற்கு, திருமாவளவனை குறித்து கேள்வி எழுப்பிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக திருமாவளவன் பொதுவெளியில் பேசி முற்றுப்புள்ளி வைப்பாரா ? அல்லது கடந்து செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.