Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அமைச்சருடன் விவாதம் நடத்த தயார்:
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அவை குறித்த பட்டியலை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு வழங்குவதுடன், அவருடன் விவாதம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்; விவாதத்திற்கான அவரது அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
அமைச்சர் முத்துசாமி மட்டுமல்ல அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கூறுவது பொய்கள் தான் என்பதை ஒரு புள்ளி விவரத்தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
66 வாக்குறுதிகள்:
திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர் 95%, 98%, 99% என்றெல்லாம் அவர் கூறினார். இது குறித்த உண்மை நிலையை விளக்க வேண்டும் என்பதற்காகத் தான் விடியல் எங்கே? என்ற தலைப்பில் ஆவணம் ஒன்றை நான் தயாரித்து வெளியிட்டேன். அதில் 66 வாக்குறுதிகள், அதாவது 13% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன்.
எப்படி 85 சதவீதம்?
அதன்பின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி செய்தியாளர்களை சந்திக்கும் போது, திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
அதன்படி பார்த்தால் 72% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதன் பின் எந்த வாக்குறுதியில் நிறைவேற்றப்படாத நிலையில், இப்போது 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும்? திமுக அரசின் முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் வாயில் வந்ததை கூறி விட்டு செல்கிறார்களே தவிர தரவுகளைத் தருவதில்லை.
எவ்வளவு நிதி?
நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இது குறித்து அமைச்சரோ, முதல்வரோ விவாதத்திற்கு வாருங்கள் என்றும் அறைகூவல் விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை.
மோசடிகள்:
இப்போது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைத் தருவதாகவும், விவாதத்திற்கு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை அழைப்பை நான் ஏற்கிறேன். அவர் மூலமாகவே திமுக அரசின் மோசடிகள் வெளிவரட்டும். எப்போது, எங்கு விவாதம் என்பதையும் அமைச்சர் முத்துசாமி அறிவிக்கட்டும். அவரை விவாத மேடையில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





















