வட தமிழ்நாட்டில் வலிமையான கட்சி
இட ஒதுக்கீடு போராட்டத்தில் முன்னெடுத்து நடத்திய வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. பாமக கட்சியாக உருவெடுத்ததில் இருந்து, வடதமிழ்நாட்டில் வலிமையான கட்சியாக இருந்து வருகிறது. பாமக பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், பாமக உடன் கூட்டணி வைக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விரும்புகின்றன.
வன்னியர்கள் மத்தியில் செல்வாக்காக இருக்கக்கூடிய பாமகவில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கிடையில் கருத்து மோதல் காரணமாக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
அன்புமணி பின்னால் பாமக ?
பாமகவின் நிறுவனராக ராமதாஸ் இருந்தாலும், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், 3 சட்டமன்ற உறுப்பினர்கள், என கட்சியின் அமைப்பு அன்புமணியின் பின்னால் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை, 98 சதவீத நிர்வாகிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நிர்வாகிகள் புறக்கணித்த பிறகு, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஒவ்வொருவராக ராமதாஸ் நீக்கப்பட்டனர். அதன் பிறகு தனது ஆதரவாளர்களை ராமதாஸ் நியமிக்க தொடங்கினார். அந்த சமயத்தில் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான, தனக்கு தான் நிர்வாகிகளில் நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் இருப்பதாக கூறிய அன்புமணி, ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகள் அந்த பதவியில் தொடர்வார் என கடிதத்தைக் கொடுக்க ஆரம்பித்தார்.
அன்புமணியை மோசமாக விமர்சித்த ராமதாஸ்
ஒரு கட்டத்தில் ராமதாஸ் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அன்புமணியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். தந்தை மகனை செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சனம் செய்தது, பாமக தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அன்புமணி தரப்பிலும், ராமதாஸ் தரப்பிலும் தனித் தனிப் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றது. அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் ராமதாக்கு நாற்காலி போடப்பட்டிருந்தது.
ஆனால் ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் புகைப்படம் கூட இடம் பெறவில்லை. மாறாக அன்புமணிக்கு எதிராக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானங்கள் ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இரண்டு முறை பதில் அளிப்பதற்கு ராமதாஸ் தரப்பிலிருந்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி எந்த பதிலும் தராததால், அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அன்புமணியின் விளக்கம் என்ன?
இந்தநிலையில் அன்புமணி தரப்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகார கடிதம் வழங்கியிருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோன்று 2026 தேர்தலுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையில் இயங்கும் பாமக அலுவலகத்திற்கு கடிதத்தை அனுப்பி இருந்ததாக அன்புமணியே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பொதுக்குழுவிற்கு அங்கீகாரம் வழங்கிய கடிதத்தை, இன்று அன்புமணி வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.