BJP Tamilnadu WestBengal PM Modi: பீகாரைப் போன்று தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement


பிரதமர் மோடி சவால்


வாக்காளர் திருத்தப் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த, பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ்குமார் அடங்கிய என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  இந்த சூழலில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி, “பீகார் வெற்றி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆம், பீகாரில் இருந்து கங்கை வங்காளத்திற்கு பாயும் நிலையில், பீகாரின் வெற்றி வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள காட்டு ராஜ்ஜியத்தை பாஜக உங்களுடன் சேர்ந்து வேரோடு பிடுங்கி எறியும் என்று வங்காளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார். இதன் மூலம் பாஜகவின் அடுத்த இலக்கு தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெறுவதே என உறுதிப்படுத்தியுள்ளார்.



பிரதமரை கிண்டலடித்த TMC


பிரதமர் மோடியின் பேச்சை கிண்டலடிக்கும் விதமாக, மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இணைக்கப்பட்டுள்ள 6 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவில் சிறுவன் ஒருவன், “இது ஒரு நல்ல கனவு” என்ற வசனத்தை பேசியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 215 இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதேநேரம், முந்தைய தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்று இருந்த பாஜக கூட்டணி, 2021ம் ஆண்டு தேர்தலில் 77 இடங்களை வென்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


திமுக கையில் உள்ள அஸ்திரங்கள் என்ன?


மறுமுனையில், தேசிய அளவில் பாஜகவிற்கு சாதகமாக கருதப்படும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை தான், தமிழ்நாட்டு அளவில் திமுகவிற்கும் சாதகமாக கருதப்படுகிறது.  காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் பல்வேறு முக்கிய அமைப்புகளின் ஆதரவையும் பெற்று திமுக கணிசமான வாக்கு சதவிகிதத்தை வசப்படுத்தியுள்ளது. அதனை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்தாலே அவர்களது வெற்றி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்



  • அதேநேரத்தில் எதிர்தரப்பில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி இன்னும் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவதில்லை

  • அண்ணாமலையின் தலைமை மாறிய பிறகு, தமிழக பாஜகவின் செயல்பாடுகள் வேகத்தை இழந்துள்ளதாக தொண்டர்களே கருதுகின்றனர்.

  • அதிமுகவில் அவ்வப்போது மூத்த தலைவர்கள் யாரேனும் ஒருவர், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபடி இருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியபடி உள்ளன

  • என்டிஏ கூட்டணியின் மூன்றாவது பெரிய கட்சியாக கருதப்படும் பாட்டாளி மக்கள் கட்சியும், தந்தை - மகன் மோதலால் இரண்டாக பிரிந்து கிடக்கிறது

  • தென்மாவட்டங்களில் கூட்டணியின் முகங்களாக கருதப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறி இருப்பதும் என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது

  • பீகார் தேர்தலில் காங்கிரஸ் கண்ட தோல்வியை குறிப்பிட்டே, அவர்களுக்கான தொகுதிகளை குறைத்து கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவும் திமுக தீவிரம் காட்டி வருகிறதாம்


இத்தகைய அனைத்து சூழல்களையும் கடந்து கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, தமிழகத்தில் திமுகவை 2026ம் ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணி வீழ்த்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


SIR ஆபத்தா?


தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் நடைபெற்ற இந்த திருத்தப் பணிகள் தேர்தல் முடிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே மாதிரியான சூழல் தமிழ்நாட்டிலும் ஏற்படுக்கூடும் என்பதே திமுக கூட்டணியின் கவலையாக உள்ளது. எனவே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஏதேனும் இடைக்கால தீர்ப்பு வழங்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.