தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வருகின்ற 29 மற்றும் 30ஆம் தேதிகளில் பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் இளையரசு, மாநில தொழிற்சங்க செயலாளர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், இன்றைய தினம் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.


 


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், "மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு, அதிமுக, ஆட்சியில் இருக்கும் போது இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், மத்திய அரசு அதற்கு காலம் தாழ்த்தி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறினார்.



தொடர்ந்து பேசும்போது, சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேருக்கும் மேல் பங்கேற்ற நிலையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று குற்றம் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டிற்கு கால அவகாசம் இருந்தும் அரசு அதனை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.


திமுகவை கண்டித்து நாளைய தினம் மதுரையில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் பங்கேற்கிக்கிறது என்றும் கூறினார். திமுக மக்கள் நலனை பார்ப்பதில்லை என்றும், தனது குடும்ப நலனில் மட்டுமே அக்கறை காட்டுகிறது என்று கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றார். 


மேலும், 2018ல் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது திமுக ஆட்சி அமைந்த உடன் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். ஆனால் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று 3.5 ஆண்டுகளை கடந்து விட்ட பிறகும் கூட தற்போது வரை அதை செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அவர் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை விரைந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.