எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் என்ன சொல்ல போகிறார்? கட்சியை விட்டு விலகப் போகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கான பதில்களை செய்தியாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.

Continues below advertisement

எடப்பாடியை சந்தித்த 6 தலைவர்கள்

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாகவும் ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும் மனநிலையிலும் இல்லையென்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே  வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அது உண்மைதான் என்பதை செங்கோட்டையன் இன்று தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்.

Continues below advertisement

சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம்

ஜெயலலிதா இறந்த பின்னர், கட்சி உடையக் கூடாது, ஆட்சியை காப்பற்ற வேண்டும் என்பதற்காக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம் என்றும் தனக்கு 2 வாய்ப்புகள் வந்தபோதும் அதை கட்சிக்காக தான் விட்டுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ள செங்கோட்டையன், கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்றால் பிரிந்து சென்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

கட்சியை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

இப்போதைய சூழலில் அதிமுக தேர்தலை சந்தித்தால் வரும் 2026 தேர்தலில் அதிமுகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் பிரிந்து சென்ற அனைவரும் (சசிகலா, தினகரன், ஒபிஎஸ்) உள்ளிட்டோரை கட்சியில் இணைத்து களம் கண்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதையும் செங்கோட்டையன் தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதியாக தெரிவித்துள்ளார்.

என்னை புறணித்தார் எடப்பாடி – செங்கோட்டையன் ஒபன் டாக்

மேலும், நாங்கள் 6 பேரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பின்னர், தன்னிடம் அவர் பேசுவதில்லை என்றும் தன்னை எந்த விஷயத்திற்கும் கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ள செங்கோட்டையன். இது சரியான அணுகுமுறை இல்லை என்பதையும் இதன்மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதோடு, எஸ்.டி.எஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஆளுநரிடம் எம்.ஜி.ஆர் ஆட்சி குறித்து ஊழல் புகார் கொடுத்தும், அவரை மீண்டும் பெருந்தன்மையோடு கட்சியில் இணைந்து பணியாற்ற அழைத்தவர் எம்.ஜி.ஆர் என்றும், அப்படி எந்த விஷயத்தையும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரிந்து சென்ற சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோர் செய்யவில்லையென்றும் தெரிவித்துள்ள செங்கோட்டையன். எம்.ஜி.ஆரை விட எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவரா? என்ற ரீதியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் கெடு – இல்லையென்றால்

அதோடு, பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். அப்படி இணைக்க முயற்சி எடுக்கவில்லையென்றால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற மனநிலை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பணிகளை செய்து முடிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் சவால் விடுத்துள்ளார்.