இதோ... அதோ... என ஒரு வழியாக அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்தபடி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், எதிர்பாராத விதமாக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தர்மரும், அதிமுக வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். போட்டி என்பதை விட, போட்டியின்றி தேர்வு என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காரணம், அதன் பின்னணியில் இருக்கும் குதிரைபேர அரசியல். 


மாவட்டத்தை தாண்டிய பெரிய அளவில் பரிட்சதம் இல்லாத தர்மர், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். முதலில் அதற்கு ஒரு தெளிவுரை தரலாம்.




தெற்கே தேவர் ‛ஃபார்முலா!


கடந்த தேர்தலில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில், தென் மாவட்டத்தில் தேவர் சமுதாய வாக்குகளை இழந்ததாக ஓபி.எஸ்., தலைமையிலான தென்மாவட்ட நிர்வாகிகள் பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில், தேவர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற பேச்சு பரவலாக இருந்தது. அதன் அடிப்படையில், கமுதி, முதுகுளத்தூர் மாதிரியான பகுதியிலிருந்து ஒருவரை தேர்வு செய்தால், அது இன்னும் தேவர் சமுதாயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்கிற கருத்தை பலர் முன்வைத்தனர். அதன் அடிப்படையில் தான், கடந்த முறை முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மகளிரணி நிர்வாகி கீர்த்திகாவிற்கு வாய்ப்பு கேட்கப்பட்டது.


ஓபிஎஸ் வைத்த ட்விஸ்ட்!


கடைசி வரை அவர் தான்  ரேஸிலும் இருந்தார். இந்த நேரத்தில் தான், அதிமுகவின் இரட்டை தலைமையான இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு தலா ஒரு சாய்ஸ் என்கிற அடிப்படையில் சீட் பிரிக்கப்பட்டது. வன்னியர் சமுதாயத்தில் ஒருவருக்கு தர வேண்டும், அதில் சி.வி.சண்முகத்தை கடந்து இன்னொருவரை இபிஎஸ் தேர்வு செய்ய முடியாது. அவருது வடதமிழக சாய்ஸ் முடிந்துவிட்டது. தென் தமிழக சாய்ஸ் என வரும் போது, கீர்த்திகா முனியசாமி, இபிஎஸ்.,க்கு நெருக்கமானவர் என்பதால், அந்த தேர்வை ஓபிஎஸ் தவிர்த்தார். அதே நேரத்தில் கமுதி, முதுகுளத்தூர் என்கிற வட்டத்திற்குள் ஒரு வேட்பாளரை கொண்டு வர வேண்டும் என்பதால், தனது தீவிர ஆதரவாளரான தர்மரை மாநிலங்களவை உறுப்பினராக ‛டிக்’ அடித்தார் ஓபிஎஸ்.




தர்மயுத்தத்தில் தாங்கிய தர்மர்!


ஏற்கனவே முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலில் பல முறை போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று, பின் மறைமுக வாக்கெடுப்பில் ஊராட்சி ஒன்றிய தலைவராக தர்மர் தேர்வானார்.  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய நாளிலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்தவர் தர்மர். ஓபிஎஸ் பசும்பொன் வரும் போதெல்லாம், அவருக்கு அரணாக நின்றவர். எனவே, தர்மருக்கு தனது தர்மயுத்த பயணத்தில் காட்டிய விஸ்வாசத்திற்கு, ஓபிஎஸ் அளித்த வெகுமதி தான், மாநிலங்களவை உறுப்பினர் பதவி. எந்த காரணத்தை முன்வைத்து கீர்த்திகா முனியசாமிக்கு வாய்ப்பு கேட்கப்பட்டதோ, அதே காரணத்தை காட்டி, தனக்கான ஆதரவாளருக்கு சீட் வழங்கியுள்ளார் ஓபிஎஸ். இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் தான்; ஆனால், இதன் மூலம் ஓபிஎஸ் ஒரு கருத்தை சொல்ல வருகிறார் என்று மட்டும் புரிகிறது.


அடித்து ஆட இறங்கும் ஓபிஎஸ்!


‛தனது ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் எதுவும் செய்வதில்லை,’ என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அதை அடியோடு அழிக்க, ஓபிஎஸ் எடுத்த பிரம்மாஸ்திரம் தான், தர்மர் தேர்வு. ‛எனக்கு ஆதரவாக இருந்தால், ஒன்றிய செயலாளரை கூட எம்.பி., ஆக்குவேன்’ என, சொல்லாமல் சொல்லியுள்ள ஓபிஎஸ், இனி தென் மாவட்ட நியமனங்களில் தனது கரத்தை வலுப்படுத்த முடிவு செய்து தான், தர்மரை முதலில் களமிறக்கியுள்ளார். 


ஒரு காலத்தில் ஓபிஎஸ்.,உடன் நெருக்கம் காட்டிய கீர்த்திகா முனியசாமி, அவரால் எதுவும் பலன் கிடைக்கவில்லை என்பதால் தான் இபிஎஸ் பக்கம் சாய்ந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத ட்விஸ்டை ஓபிஎஸ் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.