முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒதுக்கவில்லை என்ற அண்ணாமலையின் கருத்தால் அதிமுக - பாஜக இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு கட்சி தலைவர்களும் பரஸ்பரம் விமர்சித்து வருவதால் அதிமுக பாஜக கூட்டணியில் மோதல் வலுக்கிறது. 


இந்தநிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ பேசியதுதான் வைரலாகி வருகிறது. 


அரசியல் விஞ்ஞானிகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற அண்ணாமலை  விமர்சனத்திற்கு செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். அதில், “பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன்.


அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர் கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனான். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்குக்கும், தமிழக மக்களுக்கும்  நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால் கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரு கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்ச்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்ச்சித்தால் நன்றாக இருக்கும்." என தெரிவித்தார்.