எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் தடையை மீறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி கே.பி முனுசாமி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. புதிய பேருந்து நிலையம் சாலையில் அமர்ந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோன்று, எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து எடப்பாடி நகர அதிமுக சார்பாக மற்றும் ஒன்றியத்தின் சார்பாக எடப்பாடி நகர கழக செயலாளர் முருகன் தலைமையிலும், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், எடப்பாடி முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன், எடப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் எடப்பாடி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரத்தில் பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தங்களுக்கு ஆதரவாக இல்லாத அதிமுகவின் நிர்வாகிகளை நீக்கியும், பதவி கொடுத்தும் அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையில், அதிமுக கட்சி யாருக்கு என்ற வழக்கு உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஓ. பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளித்தனர்.
இருப்பினும், நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை அதே இருக்கையில் உட்கார அனுமதியளித்தார். இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அறிந்து இதை அறிந்த அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.