அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பின்னர் அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி அரசியல் சண்டை என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஜெயலலிதாவின் விசுவாசிகள் கட்சியினை ஒன்றாக இணைந்து வளர்த்தெடுப்பார்கள் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தபோது அதிமுகவில் அதிகார அரசியல் யுத்தம் தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமாக அதிமுக கட்சி முழுவதுமாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா வசம் செல்லவிருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா.


இதற்கிடையில் ஓபிஎஸ் தர்மயுத்தத்தில் ஈடுபட, முதலமைச்சரானார் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர்  எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் இணைந்த பின்னரும் இருவருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது. இறுதியில் கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி, இதன் பின்னர் ஒட்டுமொத்தமாக இருவருக்கும் இடையிலான பனிப்போர் நேரடியாக பொது மேடைகளில் வெளிவந்தது, எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வத்தை சாடுவதும், பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை சாடுவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது. 


இதில் நேற்று அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர் செல்வமும் தனது சகாக்களுடன் இணைந்து  தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தினார்.  இந்த கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், ”எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் (ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்) தோற்றது. அதிமுக இயக்கம் தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.


உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பதற்காக மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.  தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை. எடப்பாடி பழனிசாமி இடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க போகிறோம். எந்த காலத்திலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பாக தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்கத்தான் செல்ல வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.


எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலிலும் கவனம் பெற்றிருந்தாலும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்காததால், அதிமுக - பாஜகவுடனான கூட்டணி முறிந்தது என எடப்பாடி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பாஜகவுக்கு ஆதரவளித்து நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவேன் என பன்னீர் செல்வம் பேசியிருப்பது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.