அதிமுக தொண்டர்களின் எண்ணங்கள்தான் இந்த தீர்ப்பு என ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார்.  


அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடைக்கேட்டு ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில், மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.இந்த தீர்ப்பை கேட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  


இந்த நிலையில் இந்தத்தீர்ப்பை வரவேற்று பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், “ இந்த தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும், அதில் ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் ஜெயலலிதா. இந்தத்தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு எழுச்சி மிகுந்த தீர்ப்பாக இருக்கிறது. ஒற்றைத்தலைமை விவகாரம் ஒரு தொண்டனாக மிகுந்த வருத்தம் அளித்து இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்.” என்றார்.