அதிமுக விவகாரம் நீதிமன்றங்களில் இருந்தால் கட்சியை எப்படி நிர்வகிப்பீர்கள் என ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும், வரும் 16 தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் .


தொடர் வாதங்கள்:


அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை கடந்த 5  நாட்களாக நடைபெற்று வந்தது. முதல் 3 நாட்களாக ஓபிஎஸ் தரப்பிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அடுத்த 2 நாட்கள் இபிஎஸ் தரப்பிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


அதையடுத்து, இன்று இருதரப்பும், எதிர்வாதங்கள் மற்றும் பதில் வாதங்கள் வைத்ததையடுத்து, இதர தரப்பினர்களின் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.


இதையடுத்து, அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


மேலும், அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமான வாதங்களை, வரும் 16 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 


தீர்ப்பு எப்போது?


வரும் 16  ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஜனவரி 16 ஆம் தேதி வரை வழக்கின் தீர்ப்பு வராது என எதிர்பார்க்கப்படுகிறது


மேலும், தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கட்சி தொடர்பான வழக்கு என்பதால், இவ்வழக்கை மிகவும் முக்கியத்துவத்துடன், உச்சநீதிமன்றம் கையாள்வதை பார்க்க முடிகிறது. எனவே இந்த மாதத்துக்குள் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதிமுக பொதுக்குழு வழக்கு:


அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே இரட்டை தலைமை தொடர்பான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, கடந்த  ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


அதன் முடிவில்,  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.


அதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


ஓபிஎஸ் தரப்பு வாதம்:


ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது. 5 ஆண்டுகளுக்கு கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி. நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் இருவரும் இணைந்து  முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும். பொதுச்செயலாளர்  பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன்  அவைத்தலைவராக  தேர்ந்து எடுக்கப்பட்டது உட்பட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால்  தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர்  என மாற்றம் கொண்டு வந்த பின், ஈபிஎஸ் குழப்பத்தை உருவாக்குகிறார். ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு. இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி அதில் முடிவுகளை எடுத்தது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என, ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


இபிஎஸ் தரப்பு வாதம்:


அதிமுக தொண்டர்கள்தான் பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், அனைத்துக்கும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.


மேலும், அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்வது என்பது சிரமமான காரியம் என்பதால் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. மேலும் பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு


மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கியபோது, தொண்டர்களிடம் செல்லாத ஓ.பன்னீர்செல்வம், தற்போது செல்ல வேண்டும் என கூறுகிறார் என்றும் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.


தீர்ப்பு ஒத்திவைப்பு:


இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.