கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை, நீக்கியதற்கு மகிழ்ச்சி என அதிமுக முன்னார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

செங்கோட்டையன் நீக்கம்:

அதிமுகவில் சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார் . இந்நிலையில், செங்கோட்டையனை கட்சியின் அமைப்பு செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு:

தனது நீக்கம் குறித்து செய்தியாளார் சந்தித்து செங்கோட்டையன் பேசியதாவது, மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில்  நேற்று வெளிப்படையாக தெரிவித்தேன், கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலம் பதில் சொல்லும்:

சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்துகளை சொல்வதற்கு எங்கள் கட்சியில் தடையில்லை என்ற பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும் என்றார்

தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய பணி இதை(ஒருங்கிணைப்பது)நோக்கி தான் தொடரும். நேற்றைய தினம் நான் எடுத்துச் சொன்ன கருத்தின் அடிப்படையில் தொடரும். 6 பேர் என்னை சந்திக்கவில்லை, பச்சைப்பொய் என்று இபிஎஸ் கூறியதற்கு நான் விளக்கம் அளித்துவிட்டேன். நாங்கள் சந்தித்தது, கருத்துகளை பரிமாறிக் கொண்டது, பொதுச் செயலாளர் இடத்திலே தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஏறத்தாழ 8 மாதங்கள் முன்னால் இதை தெளிவுபடுத்தி உள்ளேன். கட்சி பொறுப்புகளில் இருந்து நான் நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பதை இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை.

பொதுக்குழு எப்போது கூடியது

கட்சியின் இணைப்பு பற்றி பேசுவதற்கு பொதுக்குழு எப்போது கூடியது? பொதுக்குழு கூட்டினால் மட்டும்தான் பேச முடியும். 10 நாட்களுக்குள் இந்த பணியை(ஒருங்கிணைப்பது) துவங்க வேண்டும். ஒரு மாதம் ஆனாலும் பேசி தீர்க்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

கெடு விதித்ததை கண்டித்த செம்மலை தர்மயுத்தத்திற்கு போய்விட்டு வந்தவர். அதனால் அவர் அப்படி சொல்லி இருக்கலாம். யார் தான் இந்த கருத்தை வெளிப்படுத்துவது? தொண்டர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள், இந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று மக்களும் நினைக்கிறார்கள்.

அவர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள், காலில் கூட விழுந்து இயக்கத்தில் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று காஞ்சிபுரத்திலே பேசி இருக்கிறார்கள். அதற்கு மேலே எந்த நடவடிக்கையும் இல்லை என்கிற போது, ஒரு விளக்கத்தை என் போன்றவர்கள் கட்சியின் நலன் கருதி வெளியிட்டோம் என்றார்