பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்த, அதிமுக தலைமை சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கண்டனத்தினை தெரிவித்திருந்தார். அதற்கு தமிழ்நாடு பாஜக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளார்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 


அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 


அந்த தீர்மானத்தில்,  ”இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்  அண்ணாமலை அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாகக் கொடுத்துள்ளார். இதனால், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகப் பெரிய வேதனையையும், மனஉளைச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது”.


”பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான  தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அதிமுக மீது மரியாதை வைத்திருந்தனர். தேசிய தலைவருக்கு  நிகரான ஜெயலலிதாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் மீது மிகுந்த பதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். சென்னையில் அவரது இல்லத்தில் சந்திந்து பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி இருக்கிறார்”.


 ”பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூலக் காரணமாக தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து, 1998-ல் முதன்முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமையப்பெற அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்கச் செய்ததோடு, பாரதிய ஜனதா கட்சியிள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பிளர்கள் வெற்றி பெற்றதற்கும் அரும்பாடுபட்டவர்”.


”தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா 15 ஆண்டுகள் பதவியில் இருந்து, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.  அவர்களின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்புமிகு நல்லாட்சியை வழங்கியவர். தேசிய அளவில் பல்வேறு திட்டங்களுக்கு முன்உதாரணமாக வழிகாட்டிய மகத்தான தலைவர் ஆவார்”. 


”இத்தகைய போற்றுதலுக்குரிய தலைவரை பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது”.