TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
TVK Vijay: அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

TVK Vijay: கரூர் சம்பவத்தை தொடர்ந்து நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுவிற்கு, சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவெக சிறப்பு பொதுக்குழு:
கரூரில் தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பரப்புரையில் ஈடுபட்டபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கட்சியின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிக் கிடந்தன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கடந்த மாதம் 27ம் தேதி நேரில் அழைத்து, விஜய் ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு தவெகவின் அரசியல் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. புதிய அணிகளை அமைப்பது, நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் அரசுக்கு எதிரான கண்டன அறிக்கைகளை வெளியிடுவது ஆகியவை வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் தான், இன்று விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு நடைபெற உள்ளது.
புயலாகுமா? புஸ்ஸாகுமா?
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில், தவெகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து விஜய் பங்கேற்க உள்ள, முதல் பொதுநிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்திற்கு பிறகான அவரது முதல் அரசியல் பேச்சு என்னவாக இருக்கும்? திமுகவை தொடர்ந்து விமர்சிப்பாரா? என பல கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அதோடு, தவெக மீது கட்டமைப்பு ரீதியாக பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு தீர்வு காணும் விதமாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகிகளின் மீது நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளும் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.
முக்கிய முடிவுகள் என்ன?
- விரைந்து மீண்டும் பரப்புரையை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம்
- மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முறையாகவும், பாதுகாப்பாகவும், திட்டமிடலுடனும் நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம்
- கட்சியை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது
- சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது
- பொதுச்செயலாளர் என். ஆனந்த் மீது தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை போக்க நடவடிக்கை என பல முக்கிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பொதுக்குழு நிகழ்ச்சி ஏற்பாடு
பொதுக்குழுவிற்கான அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தவெக கட்சி தலைமை பிறப்பித்துள்ளது. விஜயின் பேச்சை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்கும் வகையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட உள்ளது.





















