சென்னை: தமிழக சட்டமன்றத்தில் விவசாயிகள் மற்றும் மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

Continues below advertisement

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

இன்றைய சட்டப்பேரவையில் கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதிக்க அனுமதி வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஏற்கவில்லை என்றதும், “சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சினை பற்றி 2 நிமிடம்கூட விவாதிக்க அனுமதிக்க மாட்டீர்களா?”என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

Continues below advertisement

‘’சட்டமன்றத்தில் ஜீரோ ஹவரில் விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேச அனுமதி கேட்டும் மறுத்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகளில் 40 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர், 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கறிக்கோழி விற்கும் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்புத் தொழில் செய்துவருகிறார்கள். கிலோ ஒன்றுக்கு 6.50 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கப்படுவதற்கு அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போட்டது, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கோழிப்பண்ணை செட், தேங்காய் நார், மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம் போன்றவை உயர்ந்துவிட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

வளர்ப்புக்கூலியை உயர்த்தித் தர பலமுறை கோரிக்கை வைத்தனர், கடந்த 6 மாத காலம் அரசின் கவனத்துக்குக் கொண்டுவர போராட்டம் நடத்திவருகிறார்கள், ஆனாலும், அரசு கண்டுகொள்ளவில்லை. வளர்ப்புகூலி 6.50 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரிக்கை வைக்கிறார்கள்.

அரசு 7-1-2026 மற்றும் 21-1-26 ஆகிய தேதிகளில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சொல்லிவிட்டு, நடத்தவில்லை. இதனால் சுமார் 40 ஆயிரம் விவசாயக் குடும்பங்களும், 5 லட்சம் தொழிலாளர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த அரசு திட்டமிட்டு கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்பட்டு வருவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

இன்றைக்குச் சூழ்நிலைக்கு தக்கவாறு எவ்வளவு செலவு உயர்ந்திருக்கிறதோ அதை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதை ஜீரோ ஹவரில் கொண்டுவந்தோம். இதை பேசுவதற்குக்கூட இந்த அரசு அனுமதிக்கவில்லை. எந்தளவுக்கு இந்த அரசு சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடிக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொசு ஒழிப்பில் அக்கறை செலுத்தவில்லை. கொசுவினால் தான் பல நோய்கள் தாக்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, அரியலூர் உள்ளிட்டப் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜீயோ ஹவரில் பேசுவதாக இருந்தோம், அதற்கும் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். சிக்குன்குனியா நோயினால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அனுமதி கேட்டோம் அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம்…’’ என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தார்.

கேள்வி : பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம், ஏன் இன்றே கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டிருக்கிறாரே?

இபிஎஸ் : விவசாயிகள் 6 மாதங்களாப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கூட்டத்தொடர் இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. ஏன் இன்றே பதில் சொன்னால் என்ன? நேற்றைய தினமே கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துவிட்டோம். 40 ஆயிரம் விவசாயிகள் குடும்பம், 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு இந்த அரசு அக்கறையாக எடுத்து பதில் கொடுப்பதில்லை. 

நேற்றைய தினம் 55 விதியின் கீழ் நான் கையெழுத்து இடவில்லை. ஜீரோ ஹவரில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கவன ஈர்ப்பு எழுப்புவதற்கு மரபு இருக்கிறது. நாங்க ஆட்சியிலிருக்கும் போது ஜீரோ ஹவரில் திமுக பல பிரச்னைகளை எழுப்பியது, நாங்கள் அதற்குரிய பதில் கொடுத்தோம். 

இன்று எதிர்க்கட்சித் தலைவர் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது, அதனால் பேசவிடவில்லை. போராட்டம் நடப்பது அரசுக்குத் தெரியாதா? தெரியாது என்றால் மோசமான அரசு என்று தான் பொருள். இரண்டுமுறை முத்தரப்பு பேசுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, இந்த அரசு நடத்தவில்லை, இதெல்லாம் அரசுக்கும், துறை அமைச்சருக்கும் தெரியவில்லை என்றால், இப்படிப்பட்ட ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி.

கேள்வி: விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, நிறுவனங்களுடன் தான் நீங்கள் பேச வேண்டும் என்று அரசு அதிகாரிகள் ஒதுங்கிக் கொண்டார்கள், அரசுக்கும் பிரச்னைக்கும் தொடர்பில்லாமல் போய்விடுமா?

இபிஎஸ்: அதைத்தான் சட்டமன்றத்தில் கொண்டுவர முயற்சித்தேன், ஆனால் இந்த அரசு விவசாயிகள் பக்கம் இல்லை, முதலாளி பக்கம் தான் இருக்கிறது. உண்மையிலேயே விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தால் உடனே இன்றே கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்திருப்பார்கள். 

கேள்வி: விவசாயிகளை வரச்சொல்லிவிட்டு நிறுவனங்களுடன் பேசிக்கொள்ளுங்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்?

இபிஎஸ்: ஏற்கனவே 2 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று அறிவித்துவிட்டு பின்வாங்குகிறது என்றால், இதில் ஏதோ நடக்கிறது என்று தான் அர்த்தம். 40 விவசாய குடும்பம், 5 லட்சம் தொழிலாளர் பிரச்னை. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் கவனத்துக்கு கொண்டுவர முடியவில்லை. எல்லா இடத்திலும் போராட்டம் நடந்தால் அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறதே, விவசாயிகள் மட்டும் நிராகரிக்கப்பட்டவர்களா? அரசு கண்டுகொள்ளாதா? இது வாழ்வாதாரப் பிரச்னை சுமூகமான முறையில் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் பேச முயன்றோம் அனுமதி கிடைக்கவில்லை வெளிநடப்பு செய்துவிட்டோம்.

கேள்வி: தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் எந்த அளவு வரவேற்பு உள்ளது? காப்பி பேஸ்ட் அறிவிப்பு என்று திமுக விமர்சனம் செய்கிறதே?

இபிஎஸ்: அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். மற்றவர்களை காப்பியடித்து அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2021ல் முதலில் அறிக்கை வெளியிட்டது அதிமுக. ஒரு மணி நேரம் கழித்துதான் திமுக வெளியிட்டது. அப்போதே இது இடம்பெற்றது. அமைச்சர்கள் திட்டமிட்டு தவறான செய்தி சொல்கிறார்கள். 

அந்த அறிக்கையில் இரண்டாவதாக, மகளிர் நலன் குல விளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு மாதம் 1500 ரூபாய் கொடுக்கப்படும். வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டத்தையும் அப்போதே அறிவித்தோம். அதன்படி தான் இப்போதும் அறிவிப்பை வெளியிட்டோம். மக்களிடம் இதற்கு வரவேற்பு கிடைத்திருக்கும் எரிச்சலில் தான் ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள்.

கேள்வி: தாலிக்குத் தங்கம் தொடருமா?

இபிஎஸ்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, திமுக ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஏற்கனவே அறிவித்துவிட்டேன். மடிக்கணினி திட்டம் அம்மா அவர்கள் 52 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்களுக்குக் கொடுத்தோம். நான்காண்டுகள் இந்த அரசு நிறுத்திவிட்டு, இப்போது தோல்வி பயத்தின் காரணமாக 10 லட்சம் பேருக்குக் கொடுப்பதாக அறிவித்தனர், அதைக்கூட முழுமையாக கொடுக்க முடியாது. அறிவித்த உடனே தயாரித்துக் கொடுக்கும் வகையில் நிறுவனங்கள் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்துள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு மாணவர்களின் வாக்குகளை பெறத்தான் இத்திட்டம். உண்மையிலேயே மாணவர் மீது அக்கறை இந்தால் கல்லூரி திறக்கும்போதே கொடுத்திருக்கனும், இப்போது கொடுப்பதால் எந்த வித பயணும் இல்லை. அதிமுக திட்டம் என்பதால் முடக்கினார்கள், இளைஞர்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டதால் வாக்குகள் பெற மீண்டும் இத்திட்டம் அறிவித்துள்ளது.

கேள்வி: கடந்த 20 நாட்களில் 70க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, 80 கொலைகள், குறிப்பாக கொலை சம்பவங்கள் ரீல்ஸ் எடுக்கப்படுகிறதே?

இபிஎஸ்: ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இதற்கு காரணம் போதை பொருள் விற்பனை தான். போதை ஆசாமிகளால் தான் கொடூர செயல் நடக்கிறது. அண்மையில் சமூகநலத்துறை அமைச்சரே, திமுக ஆட்சியில் 6999 சிறுமிகள் பாதிக்கப்பட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது 104 கோடி ரூபாய் நிவரணம் கொடுக்கப்பட்டது என்று பெருமையாகப் பேசுகிறார், எவ்வளவு கொடுமையான ஆட்சி. 

ஒவ்வொரு மாதமும் சிறுமிகள், பெண்கள் பாதிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் 20 நாள் 46 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் 27 வழக்குகள் பதிவு. 20 நாளில் மட்டும் இத்தனை குற்றங்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட காரணம் நிரந்தர டிஜிபி இல்லை. தகுதியானவர்கள் பட்டியலை யுபிஎஸ்சி பரிசீலித்து மூவரை அனுப்பியது, அவர்களில் ஒருவரை நிரந்தர டிஜிபியாக நியமித்திருக்க வேண்டும், ஆனால் பொறுப்பு டிஜிபிக்கு இன்னொரு பொறுப்பு டிஜிபியாக நியமித்தனர். தங்களுக்குக் கைப்பாவையான டிஜிபி தேவை, அதனால் தன கால தாமதம் செய்கிறார்கள்.

கேள்வி: போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து பாதியில் விட்டுவிடுகின்றனர். காவல்துறையும் பாதிக்கப்பட்டுள்ளனரே?

இபிஎஸ்: 2021ல் திமுக பல வாக்குறுதிகள் கொடுத்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்று தான் சம்பந்தப்பட்டவர்கள் போராடுகிறார்கள். திட்டமிட்டு அரசுக்கு எதிராகச் செயல்படுபவர்களை ஒடுக்குவது கண்டனத்துக்குரியது. ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமையுள்ளது. அதிமுக ஆட்சியில் பல்லாயிரம் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தேன். இவர்களைப் போல் அடக்குமுறை செய்ததில்லை. இவர்கள் எங்களுக்கு கூட அனுமதி கொடுப்பதிலை, அதை மீறிப் போராடினால் வழக்குப்பதிவு செய்கிறார்கள்.

வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றாததால் போராடுகிறார்கள், அதை இந்த அரசு ஒடுக்கப் பார்க்கிறது, ஒடுக்க ஒடுக்கத்தான் வீரியம் அதிகமாகிறது. இதையெல்லாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் தங்களுக்குச் சாதகமாக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து வாக்குறுதியை நிராகரிப்பது சரியல்ல” என்பதோடு முடித்துக்கொண்டார்.