தமிழக அரசியல் களம் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பணியில் தற்போதே தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அமைந்துள்ளது. அரசியல் கட்சியைத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் செயல்பாடு சூடுபிடித்துள்ளது. 


தவெக-வில் கோவை சத்யனா?


இந்த நிலையில், விஜய் தனது கட்சியைப் பலப்படுத்தும் விதமாக ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார், காளியம்மாள் மற்றும் கோவை சத்யன் இணைய உள்ளதாக நேற்று முதலே தகவல் பரவி வந்தது. இந்த நிலையில், இன்று ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார் தவெகவில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கோவை சத்யன் தான் தவெக-வில் இணைவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 


என்றும் எடப்பாடியார்:


எதிர் கட்சி புரளி கிளப்பி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இருக்கும் கட்சியில் இருப்பவர்களே இப்படி புரளி கிளப்புவது அசிங்கம். சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியதை இன்று கட்சியில் இருந்து விலகல் என்று பொய் பரப்புவது கோழைத்தனம். எனக்கு வாழ்வும் அடையாளமும் அளித்த இரட்டை இலை அதன் தலைமையே எனது வழி. என்றும் அஇஅதிமுக , என்றைக்கும் எடப்பாடியார்.


என்று பதிவிட்டுள்ளார். 


அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கம்:


கோவை சத்யனின் இந்த பதிவு அவர் அ.தி.மு.க.வில்தான் நீடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவர் இருக்கும் கட்சியிலே புரளி கிளப்புகின்றனர் என்று குற்றம் சாட்டியிருப்பதன் மூலம் அ.தி.மு.க.விலே அவருக்கம் சில நிர்வாகிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவது உறுதியாகியுள்ளது. 


தொழில்முனைவோராக திகழும் கோவை சத்யன் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஆவார். கோவை சத்யன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைமைக்கு மிக நெருக்கமானவராக திகழ்கிறார். ஏபிபி நாடு பெயரில் கோவை சத்யன் தவெகவில் இணைவது போல, போலியாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பதிவிடப்பட்டது. இதையடுத்து, ஏபிபி நாடு சார்பில் அந்த புகைப்படம் போலியானது என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்த பல கட்சியில் இருக்கும் முன்னணி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதில் ஒரு அங்கமாகவே கோவை சத்யனை இழுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


நாம் தமிழரின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.