ADMK RajyaSabha Candidates: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக வாய்ப்பு அளிக்காதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு:

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவிற்கு நான்கு உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 2 உறுப்பினர்களும் கிடைப்பார். திமுக ஏற்கனவே மூன்று உறுப்பினர்களையும், கூட்டனியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு பதவியையும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தான், அதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் யார் யார்?

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அதிமுக கூட்டணிக்கு 70 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவர்களின் வேட்பாளர்கள் சிக்கலின்றி வெற்ரி பெறுவார்கள் என கூறப்படுகிறது.

தேமுதிக ஷாக்:

கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவதாக ஒப்பந்தம் ஆனது. ஆனால், அப்படி வழங்கப்போவதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். சொன்னபடி, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க வேண்டியது அதிமுகவின் கடைமை என பிரேமலதா கூறியிருந்தார். அதைதொடர்ந்து அக்கட்சியின் பொருளாளர் சுதிஷ், எடப்பாடி பழனிசாமியை அண்மையில் நேரில் சந்தித்து பேசினார். ஆனாலும், தேமுதிகவிற்கு வாய்ப்பு அளிக்காமல், தங்களது கட்சியினருக்கே எடப்பாடி வாய்ப்பளித்துள்ளார்.

பாமகவிற்கு ”நோ”

பாமகவில் உட்கட்சி பூசல் நிலவினாலும், பாஜக வாயிலாக அதிமுக கூட்டணிக்கு நுழைய அன்புமணி விரும்புவதாகவே கூறப்படுகிறது. அவரது பதவிக்காலமும் முடிவடைய உள்ளதால், அதிமுகவின் இரண்டு சீட்களில் ஒன்றை பெறவும் அன்புமணி திட்டமிட்டு இருந்தார். ஆனால், இரண்டு இடங்களிலும் அதிமுகவினரே வேட்பாளர்களே அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவிற்கு சட்டப்பேரவையில் நான்கு உறுப்பினர்கள் இருந்தும், அதனை கருத்தில் கொள்ளாமல் எடப்பாடி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

காலியாகும் பதவிகள்:

திமுகவின் பி.வில்சன், எம்.எம்.அப்துல்லா, எம்.சண்முகம், ம.தி.மு.க.வின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவி முடிவுக்கு வரவுள்ளது. இதில் வில்சனுக்கு மட்டும் திமுக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.  இதனைதொடர்ந்து,  ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 9 ஆகும், மறுநாள் அவை பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளுக்குப் பிறகு, ஏதேனும் போட்டி இருந்தால், ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.