Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
தவெக-வில் இணைய நிபந்தனை விதித்தேனா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

எம்ஜிஆர் காலம் முதல் அதிமுக-வில் இருந்து வந்தவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக-வில் இணைந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றிய செங்கோட்டையனின் அனுபவம் தவெக-விற்கு பக்கபலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஈரோட்டில் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார். வரும் 16ம் தேதி பெருந்துறையில் கூட்டம் நடத்த அனுமதி கோரி செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதன்பின்பு, நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது,
16ம் தேதி சுற்றுப்பயணம்:
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் எதிர்கால தமிழகம் மக்கள் எழுச்சியோடு எதிர்கால தமிழகத்தை உருவாக்குகிற விஜய், நம் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பெருந்துறை சாலை ஸ்ரீவாரி மகாலுக்கு அருகாமையில் உள்ள தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல் துறை கண்காணிப்பாளரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய அனுமதியை பெற்றவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் பேசியதா?
அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார்களோ, அதை நிறைவு செய்து வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
ரோட் ஷோ என்பது இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே தனியார் இடத்தை தேர்வு செய்து இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எதிர்கால தமிழகத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தி அவரை அங்கே அமர்த்தும். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவெக-வுடன் பேச்சுவார்த்தை நட்த்துவது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
பொறுத்திருந்து பாருங்கள்:
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாள் சுற்றுப்பயணம். பொறுத்திருந்து பாருங்கள் தமிழகமே ஒரு திருப்புமுனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உங்களை போன்றவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கு கல்லூரிக்கு செல்கின்ற குழந்தைகள் உங்களிடத்திலே என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்.
மாற்றங்கள் ஒரு பெரிய மாற்றங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உங்கள் உள்ளங்களிலே நிறைந்து இருக்கிறது. அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப மக்கள் கலந்து கொள்வார்கள்.
நிபந்தனைகள் விதித்தேனா?
16ம் தேதி பொறுத்திருந்து பாருங்கள். ஒவ்வொரு இயக்கங்களும் தங்களது கொள்கை அடிப்படையில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஒரு நல்ல இயக்கத்தோடு அதுவும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிற, நல்ல மனதோடு தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் வரும்பொழுது தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எண்ணங்கள் அனைவரிடமும் உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நான் தவெக-வில் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல். எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.





















