ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை நிறுத்துவதாக, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் ஒப்புதல் தெரிவித்தனர். இந்நிலையில் பலரிடம் நேற்று வரை பெறப்பட்ட ஒப்புதல் விண்ணப்பங்களை, இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். 


படிவத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,


அதிமுக வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் எனவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், வேட்பாளர் தேர்வு அதிமுகவின் அவைத்தலைவர் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 


அதைத், தொடர்ந்து அதிமுகவின் தற்போதைய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வேட்பாளர் தேர்வு படிவத்தினை வெளியிட்டு வாக்களிக்க கோரியிருந்தார். அதில் நேற்று அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தலைமை அலுவலகத்திற்கு வேட்பாளர் தேர்வு படிவம் வந்தடையும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. 


பலரும் ஆதரவு வேட்பாளராக தென்னரசை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.


பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு ஒரு பெயரை பரிந்துரைக்கலாம் எனவும் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


2501 பேர் ஆதரவு:


"2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 15 இறந்தவர்கள், 2 பேர்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி காலம் முடிவடைந்தது, 2 பேர் மாற்று கட்சிக்கு சென்றுவிட்டனர். ஆகையால் மீதமுள்ள 1646 பேர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் 2501 பேர் இரட்டை சிலை சின்னத்தில் வேட்பாளராக தென்னரசுவை நிற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். 145 வாக்குகள் பதிவு செய்யவில்லை" என சி.வி சண்முகம் தெரிவித்தார்.


ஒரு வேட்பாளர் பெயர் மட்டுமே என இருந்தது என ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியிருந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு ஒரு பெயரை பரிந்துரைக்கலாம் எனவும் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என இபிஎஸ் தரப்பு சி.வி.சண்முகம் தெரிவித்தார். 


ஆனால், இந்த முடிவு ஓபிஎஸ் தரப்புக்கு முழு சம்மதம் இல்லை என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், அடுத்து ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.