EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
EPS CM Stalin: திமுக ஆட்சி தமிழ்நாட்டை பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

EPS CM Stalin: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாமக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது. அஇஅதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 16, 2025
அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது…
துப்பாக்கி கலாச்சாரம்:
இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன். ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை! ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை.
பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக நிர்வாகி கொலை:
பாமக நிர்வாகியும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தி, கடந்த 11ஆம் தேதி இரவு இருசக்கர ஊர்தியில் அவரது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சக்கரவர்த்தியின் உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியால் தலையில் சுட்டதால் குண்டு பாய்ந்து உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக, சிலரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தான், சக்கரவர்த்தி விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை ஆரம்பத்தில் சொன்னது ஏன்? என்ற கேள்வி பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. பாமக தலைவர் அன்புமணியும், சக்ரவர்த்தி கொலைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.





















