புதுச்சேரி : புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை முதல்வர் ரங்கசாமியும், உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை. இது ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்" என அதிமுக அன்பழகன் குற்றச்சாட்டு .

Continues below advertisement

புதுச்சேரியில் ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மறுக்கும் அதிகாரிகளின் போக்கு மற்றும் ஆளும் அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து அதிமுக மாநிலச் செயலாளர்  அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசு நிர்வாகத்தின் குளறுபடிகள் குறித்து அவர் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள் வருமாறு:

ஒப்பந்த ஊழியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் அங்கன்வாடி ஊழியர்கள், பால சேவிகாக்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். "மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை முதல்வர் ரங்கசாமியும், உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை. இது ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்" என அவர் சாடினார்.

Continues below advertisement

"கொல்லைப்புறம்" என சிறுமைப்படுத்துவதா?

அரசின் முறையான அறிவிப்பின் மூலம் தலைமைச் செயலரின் உத்தரவின் பேரில் பணியில் சேர்ந்தவர்களை, தற்போது "கொல்லைப்புறமாக வந்தவர்கள்" என்று கூறி அதிகாரிகள் பணி நிரந்தரம் செய்ய மறுப்பது சட்டவிரோதமானது. இளைஞர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இத்தகைய அதிகாரிகளின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதிகாரிகள் மீதான கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளைச் செயல்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை அவர் கடுமையாகச் சாடினார். "சட்டமன்ற அறிவிப்புகளை அதிகாரிகள் கேட்கப்போவதில்லை என்றால், எதற்குச் சட்டமன்ற உறுப்பினர்கள்? சபாநாயகர் இருக்கையில் தலைமைச் செயலரையும், உறுப்பினர்கள் இருக்கையில் மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் அமர வைத்துச் சபையை நடத்திவிடலாமே? நிதி ஒதுக்கீட்டிற்கு மட்டும் உறுப்பினர்கள் கைதூக்க வேண்டுமா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

போராட்டக் களமாகும் புதுச்சேரி

அரசு ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவதால் புதுச்சேரி நகரமே போராட்டக் களமாக மாறியுள்ளது. அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான 'கொள்கை முடிவு' (Policy Decision) எடுக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

அரசியல் களம்: நாராயணசாமி போட்டி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பதை அதிமுக வரவேற்கிறது. அவர் போட்டியிடுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது. மக்கள் அவரை 'வெகுஜன விரோதியாகவே' பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

சிறுபான்மையினருக்குத் துரோகம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியை நம்பி வாக்களித்த சிறுபான்மையினருக்குப் புதுச்சேரி அரசு துரோகம் இழைத்து வருகிறது. நீண்ட நாட்களாக காலியாக உள்ள வக்பு வாரியத் தலைவர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தச் சந்திப்பின் போது மாநில அவைத் தலைவர் ஜி. அன்பானந்தம், துணைச் செயலாளர் நாகமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.