வரும் 17 ஆம் தேதி அதிமுக வின் பொன்விழா கொண்டாடப்படுவதை ஒட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கு நாளை மறுதினம் அதாவது 16 ஆம் தேதி சென்று சசிகலா நடராஜன் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக ஆட்களை திரட்டும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டு வேப்பெரி காவல் அலுவலகத்தில் தென் சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் இணை செயலாளர் வைத்தியலிங்கம் மனு அளித்துள்ளார். மனுவில், "வரும் 16.10.2021 அன்று காலை 10.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிக்குள்ளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திருமதி. V.K. சசிகலா (எ) சின்னம்மா அவர்கள் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, புரட்சி தலைவி அம்மா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் அதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின் கடந்த ஜனவரி மாதம் சசிகலா சிறையிலிருந்து விடுதலையானார். இதையடுத்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே அதிமுக நிர்வாகிகளை செல்போனில்தொடர்பு கொண்டு பேசி வந்தார். தொண்டர்களின் விருப்பப்படி மீண்டும் அதிமுக தலைமை ஏற்பேன்.. அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஆடியோக்கள் வெளியிட்டு வந்தார். சசிகலாவிடம் பேசிய, அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமை நீ்க்கி வந்தது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அதிமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் பலரும் மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவளித்து வருவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. இரட்டை தலைமை குளறுபடிகள் தலைதூக்கி இருப்பதால் டெல்லியின் வாக்குக்கிணங்கி சில நாட்கள் அமைதியாக இருந்த பிரச்சனை வரும் 17ம் தேதி அதிமுகவின் பொன்விழாவின் மூலம் மீண்டும் தலை தூக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதையொட்டி16ம் தேதி (நாளை மறுநாள்) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
17ம் தேதி திநகர் எம்ஜிஆர் நினைவிடம், ராமாபுரத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அங்கு அதிமுக கொடியை ஏற்றுகிறார். இதற்காக கூட்டத்தை திரட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அதிமுகவில் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்தான் போதிய பாதுகாப்பு வழங்குமாறு தென் சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் சசிகலாவை வரவேற்கும் விதமாக அவரது ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் சுவொரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இந்த முக்கியமான நிகழ்வில் கட்சியில் தலைமை மாற்றம், கட்சி பிளவு போன்றவை நடக்குமென தொண்டர்களும் எந்த திசையில் செல்வதென்று அறியாமல் நிற்கின்றனர். அந்த குழப்பத்தையே தனது சூட்சுமமாக பயன்படுத்தி வேலைகள் செய்து வருகிறது சசிகலா தரப்பு. இந்த கடைசி அஸ்திரம் தனக்கு சாதகமான முடிவை தரும் என சசிகலா தரப்பு நம்புகிறது.