Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
'திறமையான அதிகாரிகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் சரிசெய்ய வாய்ப்பு கொடுக்கலாம் என்ற முடிவில் முதல்வர் விஜய் இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன'

சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருணுக்கு தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முக்கிய பதவி ஒன்று தரப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்கள் அக்கட்சி ஆதரவாளர்கள்.
திமுக ஆட்சியில் அதிகாரமிக்கவராக திகழ்ந்தவர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண். அதே ஆட்சியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றிய அருண் மீது த.வெ.கவினருக்கு எதிராக அப்போது அவர் செயல்பட்டதாக கடுமையான புகார்களை முன்வைக்கத் தொடங்கிருக்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
குறிப்பாக, தேர்தல் நேரத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்தது அப்போதைய காவல் ஆணையராக இருந்த அருண்-தான் என்றும் திமுக மேலிடத்தின் உத்தரவுபடியே அவர் அப்படி செயல்பட்டதாகவும், அவர் திமுக ஆதரவாளர் என்ற முத்திரையையும் அருண் மீது குத்தத் தொடங்கியிருக்கிறார்கள் த.வெ.க. ஆதரவு நிலைபாடு கொண்ட நெட்டிசன்கள்.
அதே நேரத்தில், திமுகவிற்கு எதிராக பேசிவந்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது அணியினர் மீது பல வழக்குகளை போட்டு, அவர்களை சிறைக்கு அனுப்பியதில் முக்கிய பங்கு அருணுடையது என்றும் அவருக்கு த.வெ.க. ஆட்சியில் முக்கிய பதவி தரக்கூடாது என்றும் குரல் எழுந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயம்
ஆனால், அதிகாரிகள் என்பவர்கள் ஆளும் ஆட்சியாளர்களின் சொற்களை கேட்டு, அதற்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டிய எழுதப்படாத விதி இந்தியா முழுவதுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.. ஆட்சியாளர்களின் அறிவுறுத்தல்களை கேட்க மறுத்தால், டிரான்ஸ்பர் உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய நெருக்கடி மேலதிகாரிகள் உள்பட பலருக்கும் காலம்காலமாக இருந்து வருவதால், ஆளும் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவே பெரும்பாலான அதிகாரிகள் இருக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது. அப்படிதான் ஐபிஎஸ் அதிகாரி அருணும் இருந்ததாக சொல்கிறார்கள் காவல்துறை வட்டாரங்கள்.
ரவுடிகளை கட்டுப்படுத்திய அருண்
சென்னையில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்றிருந்த சூழலில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றார் அருண். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் இனி பேசுவோம் என்று அவர் அறிவித்ததில் இருந்து காவல்துறை நடவடிக்கை ரவுடிகளுக்கு எதிராக மிகக் கடுமையாக இருந்தது, சில ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில், சென்னையில் ரவுடிகளின் கொட்டம் சில நாட்களிலேயே அடங்கிப் போனது. குற்றச்செயல்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல், தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக அருண் பணியாற்றியபோது, மண்டலம், மாவட்டம் வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி குற்றங்களை குறைக்க பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தார்.
திமுக சாயம் பூசப்பட்ட அருண்
இருப்பினும், அவர் மீது திமுக சார்பு என்ற சாயம் பூசப்பட்டதாலும் திமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுத்தார் என்ற குற்றச்சாட்டும் அவருக்கு பெரும் சிக்கலாக த.வெ.க ஆட்சியில் மாறியிருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையராகவும் தமிழக டிஜிபியாகவும் இருந்து ஓய்வு பெற்ற சங்கர் ஜிவால் ஐபிஎஸ், அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகாலம் முக்கிய பதவிகள் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரின் திறமையும் தகுதியும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தெரியும். இருப்பினும், அவர் மீதூ ஊற்றப்பட்ட சாயத்தாலும், திமுகவிற்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்பட்டதாலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் திமுக ஆட்சியில் உச்சப்பட்சமான டிஜிபி அந்தஸ்து அவருக்கு கிடைத்தது.
திறமையான அதிகாரி அருண்
அதே மாதிரி, அருண் மீது கடும் விமர்சனங்களை த.வெ.க.வினர் முன் வைத்தாலும் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களை சிறப்பாக பணி செய்ய வைக்கும் திறமை அருணுக்கு உண்டு என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். தவெக ஆட்சியிலும் அருண் போன்ற திறமையான போலீஸ் அதிகாரிகளை சரியாக முதல்வர் விஜய் பயன்படுத்தினால் அது தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும் என்றும் அதிகாரிகள் வட்டத்தில் இருந்து முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை திமுக மற்றும் அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே எதிர்க்கட்சிகளாக இருக்கும் நிலையில், சிறிய குற்றச்செயல்களை கூட மிகப்பெரிய பிரச்னையாக அவர்கள் உருவாக்கிவிடுவார்கள் என்றும் அதற்கு அருண் போன்ற போலீஸ் அதிகாரிகளை முக்கிய பதவிகளில் பாரப்பட்சம் பார்க்காமல் நியமித்தால், த.வெ.க. ஆட்சிக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி அருண் ?
இந்நிலையில், அருண் தொடர்பாக வந்த பலதரப்பட்ட கருத்துகளையும் ஆய்வு செய்த முதல்வர் விஜய், ஏடிஜிபி அருணுக்கு முக்கிய பதவி தர சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், திறமையான அதிகாரிகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் சரிசெய்ய வாய்ப்பு கொடுக்கலாம் என்ற முடிவில் முதல்வர் விஜய் இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















