தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவர் ஆவார். இவர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவர் இணைந்தபோது அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.
தி.மு.க.வில் இணைந்தது ஏன்?
தி.மு.க.வில் இணைந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த திவ்யா கூறியிருப்பதாவது, "நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பேன். தி.மு.க. ஆரோக்கியத்திற்கு மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் காலை உணவுத் திட்டம். தி.மு.க. பெண்களுக்கு மிகவும் மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதத்திற்கும் மரியாதை தரும் கட்சி தி.மு.க.
கனிமொழி, தமிழச்சி, மேயர் பிரியா, மம்தா பானர்ஜி, ஜோதிமணி ஆகியோரை ரொம்ப பிடிக்கும். நான் இணைந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. என் பணிகளை அவர் பார்த்துள்ளார். எனக்கு மு.க.ஸ்டாலின்தான் ரோல் மாடல். அவரின் உழைப்புதான் காரணம். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
விஜய்க்கு வாழ்த்து:
விஜய் அண்ணா மட்டுமின்றி மக்கள் பணி செய்யும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வர வேண்டும். இதுவரை விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவில்லை. அவருக்கு வாழ்த்துகள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. ஆட்சிதான்."
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர் திவ்யா கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். அரசியல் மீது ஆர்வம் கொண்ட அவர் ஏதேனும் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அவரது தந்தையும், நடிகருமான சத்யராஜ் தீவிர பெரியார் ஆதரவாளர். திராவிட கட்சித் தலைவர்களுடன் அவர் நெருக்கமான உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திவ்யா சத்யராஜ் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்துள்ள அவருக்கு விரைவில் கட்சியில் ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.