'டெல்லி மாடல்' குறித்து ஆய்வு செய்ய கேரள பிரமுகர்கள் வருகை தந்ததாக ஆம் ஆத்மி கட்சி ட்வீட் இட்டதை அடுத்து, எந்த அதிகாரிகளையும் டெல்லிக்கு அனுப்பவில்லை என்று கேரள அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆம் ஆத்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கல்வி புரட்சியை நேரில் காண கேரளாவில் இருந்து உயரதிகாரிகள் டெல்லி அரசு பள்ளிகளுக்கு வருகிறார்கள்; வசதிகள் இவ்வளவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்கள்! கெஜ்ரிவால் அரசின் கல்வித்திட்டங்களால் ஈர்க்கப்பட்ட கல்வியாளர்கள் கேரளாவில் அதை செயல்படுத்த விருப்பம் தெரிவிக்கின்றனர்." என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி, "கல்காஜியில் உள்ள எங்கள் பள்ளி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு விருந்தளித்தது மிகவும் அருமையாக இருந்தது. அவர்கள் எங்கள் கல்வி மாதிரியை தங்கள் மாநிலத்தில் புரிந்துகொண்டு செயல்படுத்துவதில் ஆர்வமாக இருந்தனர். இது அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் தேசிய யோசனை." என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கிடையில், டெல்லியின் ஆளும் கட்சி ஆம் ஆத்மியின் கூற்றுக்களை மறுத்த கேரள அரசு, தேசிய தலைநகருக்கு யாரையும் அனுப்பவில்லை என்று கூறியது. கேரளாவின் கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி, அதிஷியின் ட்வீட்டிற்கு பதிலளித்து, "டெல்லி மாடல் பற்றி அறிய, கேரள கல்வித் துறை யாரையும் அனுப்பவில்லை. அதே நேரத்தில், கடந்த மாதம், 'கேரள மாடல்' குறித்து ஆய்வு செய்ய, டில்லியில் இருந்து வந்த அதிகாரிகளுக்கு, அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு வந்த கேரள அதிகாரிகள் யாரை நீங்கள் வரவேற்றீர்கள் என்று கொஞ்சம் கூறமுடியுமா?" என்று கேட்டு அவர் ட்வீட் செய்துள்ளார்.
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியாவும் சர்ச்சையில் சிக்கினார். மற்றொரு அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட கூற்றை கூறியதற்காக ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) கடுமையாக சாடினார். "டெல்லியின் கல்வி மாடல் பற்றிய ஆம் ஆத்மியின் கூற்றுக்கள் போலியானவை... சிசோடியா அவர்களின் இல்லாத கல்வி மாடல் எனும் பொய்யை முன்னோக்கி எடுத்துச்செல்ல புதிய திறமைகளை வளர்க்கிறாரா?" என்று ட்வீட் செய்துள்ளார் மாளவியா. கேரள அமைச்சரின் ட்வீட்களைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் கேரள பிரிவு இந்த விஷயத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. விளக்கம்: "கேரளாவில் உள்ள சிபிஎஸ்இ சங்கம் டெல்லி மாதிரி கல்வியை ஆய்வு செய்ய டெல்லி சென்றுள்ளது. டெல்லி அரசின் கீழ் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வருகை தந்த பிறகு அதிஷி எம்எல்ஏ இந்த டீவீட்டை வெளியிட்டார். ஆம் ஆத்மியின் வளர்ச்சி மாடல் இது. மாற்றம் தவிர்க்க முடியாதது, ஆம் ஆத்மி கட்சியில் இணையுங்கள். (அங்கு வந்த பார்வையாளர்களை கேரள அரசு அதிகாரிகள் என்று குறிப்பிட்டு நாங்கள் முன்பு இட்ட பதிவிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்)", என்று குறிப்பிட்டு இருந்தனர். எனவே சென்றவர்கள் கேரள அரசு அதிகாரிகள் இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது.