காலியான பாத்திரத்தில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”ப்ளேட்டும் காலி பக்கெட், கரண்டியும் காலி சும்மா ஒரு ஃபோட்டோ ஷூட்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.




உண்மை என்ன?


காலியான பாத்திரத்தில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையை அறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் மூலமாக தேடியபோது மே 13, 2024 அன்று Aaj Tak வெளியிட்டிருந்த பிரதமர் மோடி குருத்வாராவில் உணவு பரிமாறும் வீடியோ கிடைத்தது.




வைரலாகும் புகைப்படத்தின் கீ-ப்ரேம், குறிப்பிட்ட வீடியோவில் உள்ள காட்சியுடன் ஒத்துப்போனதை நம்மால் அறிய முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.


அதில், பிரதமர் மோடி பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதைத் தெளிவாக அறிய முடிந்தது. அவர் கைகளில் உள்ள பாத்திரத்திலும் உணவு இருப்பதை நம்மால் காண முடிந்தது. இதுகுறித்த செய்தியும் NDTV உள்ளிட்ட செய்திகளில் இடம்பெற்றுள்ளது.


 



காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.





பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.