தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் அர்லேகர் இழுத்தடித்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இது ஒருபுறம் என்றால், அதிமுகவிலும் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது. ஆம், வெற்றிபெற்ற 30 எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆலோசனை நடத்தி, புதுச்சேரியில் உள்ள சொசுகு பங்களாவில் தங்கியுள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அது இபிஎஸ்-ன் வியூகம் தான் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தவெக உடன் கூட்டணி அமைத்து களம் காணலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ஓ.எஸ். மணியன் தரப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்த போது, அதற்கு  அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மொத்தமாக உள்ள 47 எம்எல்ஏ-க்களில், ஆதரவு அளிக்கலாம், அளிக்கக் கூடாது என்று  இரு தரப்பினர் முரண்பாடு தெரிவித்த நிலையில், சி.வி. சண்முகம் தலைமையில், புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் 30 எம்எல்ஏ-க்களை தங்க வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, திரை மறைவில் ஒருபுறம் சி.வி. சண்முகத்திடம் செங்கோட்டையன் பேசியதுதான் என கூறப்பபடுகிறது. 

இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்வது குறித்து விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டமானது மாலை நடைபெறுவதால் ஓ.எஸ். மணியன் விடுதிக்கு வருகை புரிந்துள்ளார். இதனால் அதமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இது எடப்பாடி பழனிசாமியின் வியூகமா.?

அதிமுகவில் ஏற்பட்ட இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, இது எல்லாமே எடப்பாடி பழனிசாமியின் வியூகம் தான் என் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல், அவரும் அங்கு தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை சந்திக்க தற்போது புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஒருவேளை குதிரை பேரம் நடைபெறுமோ என்ற அச்சத்திலேயே, அதை தவிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, எம்எல்ஏ-க்களை புதுச்சேரியில் தங்க வைத்ததாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் புதுச்சேரி சென்றுள்ளார். அதற்கு முன்னதாக, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறத. அதைத் தொடர்ந்து, அங்கு சென்றும் ஆலோசனை நடைபெற உள்ளது, அதில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது இன்று இரவு தான் தெரியவரும். அதுவரை பொறுத்திருப்போம்.