பெரும்பான்மைக்கான போதிய தொகுதிகளை கூட பெறாத தவெக தலைவர் விஜய், கடன் வாங்கி, பிச்சை எடுத்து, ஏமாற்றி, பொய்ச் சொல்லி முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு மக்கள் முகுடன் சூடவில்லை என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.
கவிழ்ந்து கிடப்பதை கவிழ்க்கத் தேவையில்லை
‘கவிழ்ந்து கிடப்பதை கவிழ்க்கத் தேவையில்லை’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ள முரசொலி நாளேடு, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை வைத்து, போலி ஜனநாயகனின் காப்பாளர்கள் பொங்குகிறார்கள் என்றும், ’அவர் எப்படி அப்படி சொல்லலாம்’, மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றெல்லாம் ராஜ விசுவாசியாக கூவுகிறார்கள் என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறது.
விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருகிறோம், வாரியத் தலைவர் பொறுப்பு கொடுக்கிறோம் என்று பொய் வாக்குறுதியை தவெக கொடுத்தது. ஆனால், கொறடா உத்தரவை மீறினால் பதவியே காலியாகிவிடும் என்று தெரிந்துமே இப்படியான வாகுறுதியை விஜய் தரப்பு கொடுத்து அவர்களை ஏமாற்றியது. ஆனால், வாக்குறுதி கொடுத்தப்படி பதவி கொடுக்கவில்லை. இதனால் வாக்களித்த 19 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுச் சென்றுவிட்டனர். அதாவது விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த 19 பேர் இப்போது அவரது ஆட்சிக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முரசொலி குறிப்பிட்டிருக்கிறது.
விஸ்வநாதனை ‘போக்சோ’ விஸ்வநாதன் என குறிப்பிட்ட முரசொலி
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர் பதவிக்காக விஜயை ஆதரிக்கிறது. தேர்தலுக்கு முன்னரே சென்றிருந்தால் ஒரு துணை முதலமைச்சர், 70 எம்.எல்.ஏ, பத்து மந்திரி வாங்கியிருக்கலாம் என்று இப்போதே துணை முதலமைச்சர் எண்ணத்தில் பேசியிருக்கிறார் ’போக்சோ’ புகழ் அமைச்சர் விஸ்வநாதன் என்று குறிப்பிட்டுள்ள முரசொலி. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் விஜயை ஒரு வழி செய்துவிடுவார்கள் என்றும் எழுதியுள்ளது.
விஜய் ஆட்சியை ஆதரிக்க கம்யூனிஸ்டுகள் வெட்கம் – முரசொலி காட்டம்
விஜய் ஆட்சியை ஆதரித்து வாக்களித்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விஜய் நடத்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காமல், அந்த கூட்டணியில் நாங்கள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள முரசொலி, அந்த அளவுக்கு விஜய் ஆட்சியை ஆதரிக்க கம்யூனிஸ்டுகளுக்கு வெட்கமாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளது.
அமைச்சர் பதவிக்காக விஜய் ஆட்சியை ஆதரிக்கும் திருமாவளவன் – முரசொலி காட்டம்
குறிப்பாக, அமமுகவின் ஒரு உறுப்பினர் ஆதரவு என்பது அப்பட்டமான குதிரை பேரம் என குறிப்பிட்டுள்ள முரசொலி. வீடியோ ஆதாரத்தை வைத்து, டிடிவி தினகரனே நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திலும் ஆளுநரிடமும் புகார் கொடுத்திருக்கிறார் என்று குறிப்பிட்டு, ஒரு அமைச்சர் பதவிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விஜய் ஆட்சியை ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இவை அனைத்துமே விஜய் முதல்வராக நீடிக்க காரணம் என்றும் அவர் முதல்வராவதற்கு மக்கள் காரணம் அல்ல எனவும் தெரிவித்துள்ள முரசொலி நாளேடு, இதற்காகதான் சட்டமன்ற உறுப்பினர்களை விஜய் ராஜினாமா செய்ய வைக்கிறார் என்று குறிப்பிட்டு, இன்னும் 6 பேர் என மொத்த 12 பேரை முதலீடு செய்து ராஜினாமா செய்ய வைப்பது யார், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அதிகார மட்டங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ள முரசொலி, இந்த முகத்திரை கொஞ்சம், கொஞ்சமாக கிழியும் என்றும் கிழிந்து கவிழும்போது மொத்தமாய் தெரியும் என்றும் எழுதியிருக்கிறது.
