அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள தூர்வாரும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மெகா தூர்வாரும் முகாம் ஏற்படுத்தப்பட்டு அவை மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் மாவட்டம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. குறிப்பாக மழைநீர் அதிகம் குடியிருப்பு பகுதியில் தேங்கி வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் பல்வேறு குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோன்று சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களில் முழுவதுமாக மழை நீர் தேங்கி பயிர்கள் அழுக கூடிய சூழல் உருவாகும். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரை வடிய வைப்பதற்கு விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டே தண்ணீரை வடிய வைத்து வருகின்றனர். ஆகையால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வடிகால் வாய்க்கால் அனைத்தையும் முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.



இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் கால்வாய்கள், மழைநீர் வடிகால் ஆகியவைகளை மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்விற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 

வடகிழக்கு பருவமழை பருவம் காரணமாக பொழியக்கூடிய பருவமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்க நிலை ஏற்படா வண்ணமும், அதிகப்படியாக தேங்கும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும், மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது ஆகையால் வரும் பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மழைநீர் வடிகால்கள் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.



அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்திட உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் நகராட்சி மேலாளர் கண்ணன் பிரபாகரன், பழனியாண்டவர் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.