டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகக்கு கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் போதுமான கேட் கீப்பர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் முன்னாள் ராணுவத்தினர் இந்த பணியில் சேர தயக்கம் காட்டுவதால் நிரந்தர பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். விழுப்புரம், திருச்சி தவிர வேறு எங்கும் ரயில் பராமரிப்பு வசதிகள் இல்லாததால் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் உள்ள திருவாரூரில் அனைத்து ரயில்களுக்கான முதன்மை பணி அமைத்திட வேண்டும்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரத்திற்கு நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்படுவதால் அவசர உறுதிகளான ஆம்புலன்ஸ் 108 சேவை வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு செம்மொழி விரைவு ரயிலுக்கான இன்ஜின் மாற்றத்தை திருவாரூரில் செய்ய வேண்டும் காலையில் காரைக்கால் இருந்து சென்னைக்கு ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும். அதிகாலையில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் தஞ்சாவூர் வழியாக கன்னியாகுமரிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28ஆம் தேதி திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது தொடர்பாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவாரூரில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது, "டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரெயில்கள் குறித்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், தென்னக ரெயில்வே அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுத்தி, நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இதனால் டெல்டா பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த பகுதியை தென்னக ரெயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்கிற கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள். எனவே டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து வரும் 28ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஒருமித்தமாக முடிவு செய்யப்பட்டுள்ளது." என்றார்.
இதனையடுத்து பேசிய திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் "மக்கள் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த போராட்டம். நாங்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்து செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பலமுறை நிறைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தும் நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதும் நிறைய பேசியிருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் அதிக ரயில்களை இயக்க வேண்டும்.
மீண்டும் இந்த திருவாரூர் நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பெரிய அளவில் பழைய மாதிரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதை எவ்வளவோ வலியுறுத்தியும் தென்னக ரயில்வே கேட்காத காரணத்தினால் பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அரசியல் இயக்கங்கள் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.நாங்கள் நான்கைந்து இடங்களில் இந்த ரயில் மறியல் போராட்டத்தை நடத்தலாம் என்று இருக்கிறோம்.அது மட்டும் இல்லாமல் அந்தந்த ஊர்களில் பொதுமக்கள் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று தெரிவித்தார்.