குரங்கு அம்மைத் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான நிலையங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
20க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை:
பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உலகம் முழுவதும் 20 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றே இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்து பரவும் குரங்கம்மை பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலக சுகாதார மையம் அவ்வபோது இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
கொரோனா போன்று உலக அளவில் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், குரங்கு அம்மை நோய் என்பது சர்வதேசப் பரவல் என்பதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மற்றவர்களுக்கு குரங்கு அம்மை நோய் பரவ வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது பற்றியும், இதற்கான தடுப்பூசியை கண்டறியவும், யார் யாரை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
வேகமாகப் பரவும் நோயல்ல:
குரங்கம்மைத் தொற்று நோயினால் உலகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. எனினும், குரங்கம்மை நோய் என்பது தொற்று நோய் என்பதால் சர்வதேச நாடுகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாகப் பரவும் நோயல்ல என்றாலும் மெதுவாக இது சமூகப் பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை குரங்கு அம்மை நோய் இங்கு பதிவாகவில்லை என்றாலும், சர்வதேச நிலவரத்திற்கேற்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குரங்கு அம்மை நோய் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறியிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை கடிதம்:
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வபோது அறிவுறுத்தல்களை வழங்கி வரும் தமிழ்நாடு சுகாதாரத்துறை, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மைத் தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் பாதிப்பு உள்ளது என்பதால், குரங்கு அம்மைத் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு கடிதம் மூலமாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு. விமான நிலையங்களில் சர்வதேசப் பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு உள்ளிட்டவை இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.