மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காவல்நிலையத்தில் தீக்குளித்த நபர்
சமீபத்தில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அதனை தடுக்க சென்ற காவலரும் தீக்காயம் அடைந்தார். அதே போன்று சீர்காழி அருகே கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவலர்கள் ஒருத்தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சட்டி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதனை தடுத்த காவல் ஆய்வாளரின் விதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
ஒரே நாளில் 4 பேர் தற்கொலை முயற்சி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நேற்று 19.05.2025 -ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று புகார் மனு அளிக்க வந்த நான்கு நபர்கள் தங்கள் மனு தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவர்கள் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புகார் மனு அளிக்க வந்த நான்கு நபர்கள் சட்டத்திற்கு புறம்பாக தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி. தடுப்பு நடவடிக்கை
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், விசாரணை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காகவும், பிற தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்களை முழு சோதனை செய்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று 20.05.2025 -ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெறும் சோதனை பணிகளை நேரடியாக பார்வையிட்டு, மேற்கூறப்பட்டது போன்ற சம்பவங்களை தவிர்த்திடும் பொருட்டு சோதனை அலுவல் மேற்கொள்ளும் போது. சோதனைக்கு உட்படும் நபர் அவரது உடையிலோ அல்லது அவர்கள் கொண்டு வரும் உடைமைகளிலோ ஏதேனும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் அல்லது ஆயுங்களை எடுத்து வருகிறார்களா? என்பதை கண்டறியும் பொருட்டு பின்பற்ற வேண்டிய சோதனை வழிமுறைகள் குறித்து சோதனை அலுவலில் ஈடுபட்டிருந்த காவல் ஆனினர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
பொதுமக்களுக்கு அறிவுரை
மேலும் புகார் மனு அளிப்பதற்காகவும், பிற தேவைகளுக்காவும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை உரிய முறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; தங்கள் குறைகள் குறித்து காவல்துறையிடமும் அரசு அதிகாரிகளிடம் மக்கள் புகார் மனு அளித்து வரும் நிலையில் அதன் மீது எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லாதது இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ஆறு பேர் இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களை போன்ற சமூக ஆர்வலர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளனர்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.