சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிக்கிய துணை வட்டாட்சியர் - கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் பட்டா பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோயில் பத்து தாடாளன்கோயில் பகுதியை சேர்ந்தவர் குஞ்சிதபாதம் என்பவரது மகன் 59 வயதான அலெக்சாண்டர். இவரது தந்தை குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972 -ஆம் ஆண்டு அரசு சார்பில் 650 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலம் குஞ்சிதபாதத்திற்கு பிறகு அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் இருந்து வருகிறது.

நத்தம் பட்டா கணினி பதிவேற்றம் செய்ய மனு
இந்நிலையில் அந்த இடத்தின் பத்திரத்தை வைத்து வங்கிக் கடன் வாங்குவதற்காக அலெக்ஸாண்டர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இந்த நிலம் நத்தம் பட்டா கணினி பதிவேற்றம் செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலெக்ஸாண்டர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் தேவகியை சந்தித்து தனது நிலத்திற்குரிய நத்தம் பட்டாவை கணினி பதிவேற்றம் செய்வது குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

15 ஆயிரம் பேரம் பேசிய துணை வட்டாட்சியர்
இது தொடர்பாக மண்டல துணை வட்டாட்சியர் தேவகி அவரிடம் ரூபாய் 15 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் கணினியில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார். கையூட்டு கொடுக்க விரும்பாத அலெக்சாண்டர் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், காவல் ஆய்வாளர் அருள் பிரியா மற்றும் போலீசார் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய பணத்தினை கொடுத்து அனுப்பி உள்ளனர்.

கையும், களவுமாக பிடித்த போலீசார்
அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட அலெக்ஸாண்டர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்டல துணை வட்டாட்சியர் தேவகியிடம் அவர் கேட்ட பணத்தை கொடுக்க வந்துள்ளார். அப்போது அந்த பணத்தை அவர் நேரடியாக வாங்காமல் அலுவலகத்தில் உள்ள தற்காலிக கணினி பணியாளர் டெல்பியிடம் கொடுத்திட தேவகி கூறியுள்ளார். அதன்படி டெல்ஃபி ரரசாயணம் தடவிய பணத்தை அலுவலக வாசலில் பெற்றுக் கொண்டு தனது இருக்கையின் அருகே வைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பணத்தை பறிமுதல் செய்தனர். டெல்பியிடம் விசாரணை செய்ததில் மண்டல துணை வட்டாட்சியர் தெரிவித்ததின் பெயரில் பணத்தை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

பெண் துணை வட்டாட்சியர் கைது
இதனை அடுத்து மண்டல துணை வட்டாட்சியர் தேவகி, தற்காலிக கணினி பணியாளர் டெல்ஃபி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை சார் போலீசார் வட்டாட்சியர் அலுவலக கதவினை பூட்டி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை செய்தனர். விசாரணையின் நிறைவில் லஞ்சம் பெற்றது உறுதியானது இதனையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கணினியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்று துணை வட்டாட்சியர் கைதான சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















