கோடை வெப்பத்தால் பாதிக்கப்படும் பறவைகளின் இன்னல்களை போக்கும் வகையில் சமூக ஆர்வலர் பாரதிமோகன் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

சமூக ஆர்வலர் பாரதிமோகன் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாரதிமோகன். வெளிநாடு சென்றுவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பியுள்ள இவர், மயிலாடுதுறை சாலைகளில் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்களை கண்டு வேதனையடைந்துள்ளார். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த பாரதிமோகன் ஆதரவர்றவர்களை தேடி உணவு வழங்க தொடங்கினார். 

Continues below advertisement

பலருக்கு உதவி

யாரும் உறவுகள் இன்றி இருக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து அவர்களை தூய்மைப்படுத்தும் சேவைப் பணியையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பங்களை பிரிந்து சுற்றி திரியும் நபர்களை கடும் முயற்சி எடுத்து அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பது என பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். 

2012 -ல் தொடங்கிய சேவை

கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதிமோகன், இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். 

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்

கடந்த பல ஆண்டுகளாக மனிதர்களின் துயர் தீர்த்து வைத்த பாரதிமோகன் தற்போது "அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்" என்ற கூற்றுக்கிணங்க பறவைகளிடம் அவரது பார்வை திரும்பியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் மனிதர்களை கடந்து அனைத்து ஜீவராசிகளை வதையாய் வதைவதைத்து வருகிறது. இந்த சூழலில் வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீர் இன்றியும், உணவின்றியும் தவிக்கும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் சமூக சேவகர் பாரதி மோகன் பறைவகளுக்கு உதவும் நோக்கில் சிறுதாளியங்கள் மற்றும் தண்ணீர் அடங்கிய கூண்டுகளை அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளார்.

புதிய முயற்சி 

இதற்காக மளிகை கடைகளில் இருந்து தகர பெட்டிகளை வாங்கி, அதில் நான்கு புறமும் பறவைகள் அமரும் வகையில் கம்மிகள் கொண்டு வழி அமைத்து அதன் நடுவிலேயே தண்ணீரும், மற்ற இடங்களில் சிறுதானியங்களும் வைக்கும் வகையில் உருவாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது அவற்றில் சிறுதானியங்கள் மற்றும் தண்ணீர் வைத்து சாலையோர மரங்கள் மற்றும் பறவைகள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பாக அமைத்து வருகின்றார். மேலும் தினமும் அதில் சிறுதானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பி பராமரிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். 

மாவட்ட முழுவதும் சேவை

தற்போது 20 கூண்டுகளை பெரம்பூர் கிராமத்தில் பறவைகள் கூடும் பல்வேறு இடங்களில் கம்பு கேழ்வரகு, திணை அரிசி பொட்டுக்கடலை உள்ளிட்ட உணவுடன் தண்ணீர் நிரப்பிய கூண்டுகளை மரத்தில் கட்டியுள்ளார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பறவைகளின் நலன் கருதி நூற்றுக்கு மேற்பட்ட கூண்டுகளை வைத்து கோடைகாலத்தில் தினமும் உணவும் தண்ணீரும் வழங்க உள்ளதாகவும், இதே போல் அனைவரும் அவரவர் பகுதியில் செய்தால் பறவைகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம் எனவும் சமூக ஆர்வலர் பாரதிமோகன் தெரிவித்துள்ளார். மேலும் இவரது இந்த செயல் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.