காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கரையேறிய விசைப்படகில் கழிவு மீன் சேமிப்பு தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட விஷவாயுத் தாக்கலில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மயக்கமடைந்த மூன்று மீனவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் காரைக்கால் மற்றும் சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஆழ்கடல் மீன்பிடிப்பு பயணம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி காரைக்கால் மற்றும் பக்கத்து மாநிலமான தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்த அவர்கள், தங்களது பணியை முடித்துக்கொண்டு நேற்று இரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்குப் பாதுகாப்பாகத் திரும்பினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நேரிட்ட அசம்பாவிதம்

துறைமுகத்திற்கு படகு வந்து சேர்ந்ததும், அதில் சேகரிக்கப்பட்ட மீன்களைக் கரைக்கு இறக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது, படகின் அடிப்பகுதியில் உள்ள கழிவு மீன் சேமிப்பு அறைக்குள் (Fish Hold Area) காரைக்கால்மேடைச் சேர்ந்த மீனவர் முத்துவேல் என்பவர் முதலில் இறங்கியுள்ளார். நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த அந்தத் தொட்டியில் தேங்கியிருந்த கழிவு மீன்களிலிருந்து வெளியான பலத்த நச்சு வாயுவைச் சுவாசித்த நொடியிலேயே, அவர் மூச்சுத்திணறி தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.

Continues below advertisement

அவர் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்களான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன், அபினேஷ் மற்றும் அருண் ஆகியோர் அவரை மீட்கும் அவசரத்துடன் அடுத்தடுத்து அந்தச் சேமிப்பு அறைக்குள் இறங்கியுள்ளனர். ஆனால், அங்கு அடர்த்தியாகப் பரவியிருந்த நச்சு வாயுவின் வீரியம் காரணமாக, உள்ளே சென்ற கதிரவன் உள்ளிட்ட அனைவரும் அடுத்தடுத்து நிலைகுலைந்து மயங்கி விழுந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி - உயிரிழப்பு உறுதி

படகின் மேலே இருந்த மற்ற மீனவர்கள் கூச்சலிடவே, துறைமுகத்தில் இருந்த சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு தொட்டிக்குள் மயங்கிக் கிடந்த 4 பேரையும் வெளியே மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலமாக அனைவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் கதிரவன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட முத்துவேல், அபினேஷ் மற்றும் அருண் ஆகிய மூவருக்கும் காரைக்கால் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) செயற்கை சுவாசக் கருவிகளுடன் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போலீசார் விசாரணை மற்றும் காரணம்

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நிரவி காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்கள் காற்றோட்டம் இல்லாமல் பூட்டப்பட்டிருக்கும் மீன் சேமிப்புத் தொட்டிகளில், எஞ்சிய மீன்கள் அழுகி அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற கொடிய நச்சு வாயுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காற்றோட்ட வசதி இல்லாமல் தொட்டிக்குள் இறங்கியதே இந்த அசம்பாவிதத்திற்கு முதன்மை காரண இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அலைமோதிய மீனவர்கள் - சோகத்தில் கடலோர கிராமங்கள்

விஷவாயு தாக்கி மீனவர் உயிரிழந்த செய்தி பரவியதும், காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மீனவர்களும், பலியானவரின் உறவினர்களும் திரண்டதால் பெருஞ் சோகம் நிலவியது. உயிரிழந்த கதிரவனின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க விசைப்படகுகளில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.