மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளில் தரம் குறைவாக இருப்பதாகப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சமும், புகார்களும் எழுந்துள்ளன.
ரயில் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கனமழையில் மயிலாடுதுறை ரயில் நிலைய முகப்பின் மேற்கூரையில் இருந்து சுமார் 35 கிலோ எடை கொண்ட ஜிஆர்சி (Glass Fibre Reinforced Concrete) ஷீட்டுகள் பெயர்ந்து விழுந்த நிலையில், இன்று காலையும் மேலும் இரண்டு ஷீட்டுகள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட விபத்து
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, ரயில் நிலைய முகப்புப் பகுதியின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த, சுமார் 4 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் கொண்ட, தலா 35 கிலோ எடை கொண்ட இரண்டு ஜிஆர்சி ஷீட்டுகள் பெயர்ந்து கீழே விழுந்தன. நள்ளிரவு நேரம் என்பதாலும், மழையின் காரணமாக ஆள் நடமாட்டம் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, ஷீட்டுகளைப் பொருத்த பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூக்கள் மிகச் சிறிய அளவில் இருந்ததே எனக் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, உடனடியாக மேற்கூரை முழுவதும் இருந்த சிறிய ஸ்க்ரூக்கள் அகற்றப்பட்டு, பெரிய அளவிலான புதிய ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன.
ரயில் நிலையத்தில் தொடர்ந்த ஆபத்து
வெள்ளிக்கிழமை நடந்த விபத்தின் அச்சம் தணியாத நிலையில், இன்று காலை ரயில் நிலைய நுழைவு வாயில் முகப்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு ஜிஆர்சி ஷீட்டுகள் பெயர்ந்து விழுந்தன. இந்த சம்பவம், பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முகப்புப் பகுதியில் காங்கிரீட் பயன்படுத்தப்படாமல், வெறும் இரும்பு சட்டங்கள் அமைக்கப்பட்டு ஜிஆர்சி ஷீட்டுகள் பொருத்தப்பட்டிருப்பது, கட்டுமானத்தின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ரயில் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் ஷீட்டுகள் கீழே விழுந்தது, பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. பயணிகள் மற்றும் பொதுமக்கள், இந்த விபத்துகளுக்கு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் தரம் குறைவே காரணம் எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பணிகள் தரமற்றதா? பொதுமக்கள் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் குறித்து ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ளன. இவ்வளவு பெரிய எடை கொண்ட ஷீட்டுகள் விழும்போது, கீழே யாரேனும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகாரிகள் இந்தப் பணிகளை முறையாகக் கண்காணிக்காததே இதற்குக் காரணம்" எனப் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஷீட்டுகள் கீழே விழுந்து வருவது, கட்டுமானப் பணிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், இந்தப் புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குப் பின்புறம் கழிப்பிடம் கட்டப்பட்டு வருவதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "தேசத்தின் பெருமையைப் பறைசாற்றும் தேசியக்கொடிக்கு அருகில் கழிப்பறை கட்டுவது முறையற்ற செயல். இது நமது தேச உணர்வுகளுக்கு எதிரானது" என்று பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கை
இத்தகைய குறைபாடுகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட ரயில்வே மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கட்டுமானக் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேசியக்கொடி கம்பம் அமைந்துள்ள பகுதியின் புனிதத்தன்மையைக் காக்கும் வகையில் கழிப்பறை கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் புகார் குறித்து ரயில்வே நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைய நிலையில், ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வு நிலவி வருகிறது.