தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாகக் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் 1998 (திருத்தம்) 2025, மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த நபர் மீது இந்த புதிய சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்கு நன்னடத்தை பிணையம் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு காதல் தொல்லை
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, குத்தாலம், கள்ளிக்காடு, தெற்குத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் என்ற இளைஞர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் அப்பெண்ணை செல்போன் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்து, இதனால் அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
விக்னேஷின் தொடர்ச்சியான தொல்லைகளால் பாதிக்கப்பட்ட அப்பெண், மிகுந்த மனவேதனை அடைந்து பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் குத்தாலம் காவல் நிலையத்தில் விக்னேஷ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில், விக்னேஷ் மீது குத்தாலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி உடனடியாகக் கைது விக்னேஷை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
நன்னடத்தை பிணையம்
தொடர்ந்து விக்னேஷ் நீதிமன்றப் பிணையில் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விக்னேஷ் மீது நன்னடத்தை பிணையம் பெறுமாறு நிர்வாக நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில், குத்தாலம் ஆய்வாளர், விக்னேஷை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். அங்கு, விக்னேஷுக்கு நன்னடத்தை பிணையம் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிணையத்தின்படி, விக்னேஷ் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரவோ அல்லது தொடர்பு கொள்ளவோ முயற்சிக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு உத்தரவை விக்னேஷ் மீறும் பட்சத்தில், அவருக்குச் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கருத்து
இது, புதிய சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான மற்றும் முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பெண்களைத் துன்புறுத்துவோர் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக இயற்றப்பட்ட சட்டம், வெறும் சட்டப் புத்தகங்களில் மட்டுமில்லாமல், நடைமுறையிலும் கடுமையாகச் செயல்படுத்தப்படும் என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. இது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க உதவும் என்றும், பெண்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழ வழிவகுக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் மூலம், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் உருவாகும். இது எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த தடுப்பு நடவடிக்கையாகவும் அமையும். இந்தச் சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் புகார் அளிக்க முன்வருவார்கள் என்றும் தெரிவித்தனர்.
புதிய சட்டத்தின் முக்கியத்துவம்
பெண்களுக்கு எதிரான தொல்லைகளைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் 1998 (திருத்தம்) 2025 சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 7(c) ஆனது, எந்தவொரு பெண்ணையும் தனிப்பட்ட முறையிலோ, வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, மின்னணு அல்லது தொலைபேசி மூலமாகவோ, அல்லது மூன்றாம் நபர் மூலமாகவோ எந்த வடிவத்திலும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதைத் தெளிவாக வரையறுக்கிறது. இதன் மூலம், பெண்களை அச்சுறுத்தும், துன்புறுத்தும் செயல்களுக்குக் கடுமையான தண்டனைகள்விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.