மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையிலும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவரை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரகசிய தகவலும் அதிரடி சோதனையும்
மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி (08.02.2026), மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை, மாப்படுகை, கவரத்தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் குகன் (24) என்பது தெரியவந்தது. மேலும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதை ஒப்புக்கொண்டார்.
கஞ்சா பறிமுதல் மற்றும் கைது
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைச் சோதனை செய்தபோது, விற்பனைக்காக அவர் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், குகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது எப்படி?
கைது செய்யப்பட்ட குகன் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இவர் தொடர்ந்து இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவருடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அவசியம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், குகனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், கடந்த 12.03.2026 அன்று குகனைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மத்திய சிறையில் அடைப்பு
ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர், குகனை கடலூர் மத்திய சிறையில் கொண்டு அடைத்தனர்.
நடப்பாண்டு புள்ளிவிவரங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் மட்டும் இதுவரை ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
*பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தவர்: 01 நபர்.
*மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 03 நபர்கள்.
* கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்: 01 நபர் (தற்போதைய நடவடிக்கை).
மேலும், கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் கண்காணிப்பாளரின் கடும் எச்சரிக்கை
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக,
ரௌடிசத்தில் ஈடுபட்டுப் பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.
இவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
