ராசி மாறினார் குருபகவான்! மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தியை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் இதுதான்...
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்குத் தங்கக் கவச அலங்காரத்தில் தருமபுரம் ஆதீனம் கர்த்தர் முன்னிலையிலா மகா தீபாராதனை நடைபெற்றது.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்குத் தங்கக் கவச அலங்காரத்தில் தருமபுரம் ஆதீனம் கர்த்தர் முன்னிலையிலா மகா தீபாராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கால் டாக்ஸி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குரு அனுக்கிரகத் தலமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில், குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம்பெயர்ந்ததை முன்னிட்டு இன்று சிறப்பான குரு பெயர்ச்சி விழா மற்றும் மகா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பிரவேசத்த குரு பகவான்
நவகிரகங்களில் ‘சுப கிரகம்’ என்றும், ‘தேவகுரு’ என்றும் போற்றப்படும் குருபகவான், ஓராண்டிற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்கிறார். ஜோதிட சாஸ்திரங்களின்படி, குரு இருக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்கள் அதிக புண்ணியம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த வகையில், இன்று மே 26 -ம் தேதி காலை சரியாக 11.08 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம்பெயர்ந்தார். தனக்காரகன் மற்றும் புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை, இத்தகைய பெயர்ச்சி காலங்களில் வழிபாடு செய்வது வாழ்வில் மேன்மையான பலன்களைத் தரும் எனக் கருதப்படுகிறது.
ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு குரு பகவான் ‘ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தி’ என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, இந்த ஆலயத்தில் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
குரு பெயர்ச்சி நிகழ்ந்த 11.08 மணியளவில், ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டு, மலர் அலங்காரங்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பஞ்சமுக தீபாராதனையும் பக்தர்களின் தரிசனமும்
விழாவின் முக்கிய நிகழ்வாக பஞ்சமுக அர்ச்சனை மற்றும் பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. மேதா தட்சிணாமூர்த்தி தங்கக் கவச அலங்காரத்தில் ஜொலித்த காட்சியைக் கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று குரு பகவானை தரிசனம் செய்து வழிபாடுகளை நடத்தினார்.
கோயில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறை மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மேதா தட்சிணாமூர்த்தியைத் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தருமபுரம் ஆதீன நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி வழிபாடு நடத்துவது விசேஷம் என்பதால், இத்தலத்திற்கு வந்திருந்த பக்தர்கள் குருபகவானின் அருளைப் பெற ‘குரு தியான ஸ்லோகங்களை’ பாடி மனமுருகி வழிபட்டனர். மேதா தட்சிணாமூர்த்தியின் அருளால் கல்வியில் மேன்மை, திருமண யோகம் மற்றும் புத்திர பாக்கியம் கைகூடும் என்பது இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















