ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த சிறப்பு வழிபாடு செய்தனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை:‌ ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவிடைக்கழி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷங்களுடன் பக்தி பரவசத்தில் வழிபாடு நடத்தினர்.

ஆலய தல பெருமையும் புராண பின்னணியும்

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இத்திருக்கோயில் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமாகும். சூரபத்மனின் இரண்டாவது மகனும், சிவபக்தனுமான ஹிரண்யாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள, முருகப்பெருமான் இத்தலத்தின் குரா மரத்தடியில் சிவபெருமானைப் பூஜித்து பாவ விமோசனம் பெற்றார் என்பது தலபுராண வரலாறு.

Continues below advertisement

பண்டைய தமிழ் இலக்கியங்களில் ‘குராவடி’ என்ற பெயரில் குறிப்பிடப்படும் இத்தலம், முருகனின் பாவம் கழிந்த இடமாக அமைந்ததால் ‘திருவிடைக்கழி’ என்று பெயர் பெற்றது. மேலும், முருகப்பெருமானை மணமுடிக்க விரும்பிய தெய்வானை அம்மையார் தவம் இயற்றிய பெருமைக்குரிய இடமாகவும் இது திகழ்கிறது. சிவபெருமானைப் பூஜித்த நிலையில் முருகப்பெருமான் காட்சி தரும் இத்தலம், பிரசித்தி பெற்ற திருச்செந்தூருக்கு நிகராகப் போற்றப்படுகிறது. அருணகிரிநாதர் உள்ளிட்ட சந்தக் கவிஞர்கள் இத்தலத்து முருகனைப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளனர்.

பாதயாத்திரையாக வருகை தந்த பக்தர்கள்

ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாகக் கோயிலுக்கு வருகை தந்தனர்.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பால்காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, பால்குடங்கள், ஆகியவற்றை ஏந்தி, பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும்.

ஆடிக்கிருத்திகை நன்னாளை முன்னிட்டு அதிகாலை முதலே பாலசுப்பிரமணிய சுவாமிக்குத் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. மூலவருக்குப் பால், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியப் பொடிகளைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் பாதயாத்திரையாகக் கொண்டு வந்த பாலாலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தூப தீப ஆராதனைகளுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்திப் பரவசத்தில் மூழ்கிய திருவிடைக்கழி - முருக பக்தர்கள் நெகிழ்ச்சி 

காலை முதலே கோயிலின் வெளிப்பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ‘முருகனுக்கு அரோகரா’, ‘வேலனுக்கு அரோகரா’ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.