திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருத்தலமான திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகவும், மார்க்கண்டேயனுக்காக எமனை ஆட்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலமாகவும் இது விளங்குகிறது. 

Continues below advertisement

உலகிலேயே மனிதர்களின் ஆயுள் விருத்திக்காக ஷஷ்டியப்தபூர்த்தி (60-ம் கல்யாணம்), பீமரத சாந்தி (70-ம் கல்யாணம்), சதாபிஷேகம் (80-ம் கல்யாணம்) மற்றும் பல்வேறு சிறப்பான ஆயுள் விருத்தி ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும் ஒரே கோயில் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

இத்தகைய வரலாற்று மற்றும் புராணச் சிறப்புகள் நிறைந்த திருக்கடையூர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 10 நாட்கள் வெகு விமர்சையாக ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

Continues below advertisement

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரப் பெருவிழா கடந்த 5-ம் தேதி மிகச் சிறப்பாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாத் தொடக்க நாளை முன்னிட்டு அபிராமி அம்மனுக்கும் அமிர்தகடேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்திற்குப் பூஜைகள் செய்யப்பட்டு விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

திருவிழாவின் தொடர்ந்து வந்த நாட்களில், நாள்தோறும் இரவிலும் காலையிலும் அபிராமி அம்மன் சிம்ம வாகனம், கமலம், மயில், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வண்ணமயமான வாகனங்களில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலாவின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தும், தீபாராதனை காட்டியும் அம்மனை வழிபட்டனர்.

கோலாகலமாக நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு

விழாவின் முக்கியச் சிகர நிகழ்வாக, ஆடிப்பூரத் திருநாளான இன்று அபிராமி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகளும் தீர்த்தவாரி உற்சவமும் மிகக் கோலாகலமாக நடைபெற்றன. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரடியாகத் தலைமை தாங்கி, முன்னிலை வகிக்க இந்த முக்கிய நிகழ்வுகள் தொடங்கின.

முதலில், திருக்கோயில் மூலவர் அபிராமி அம்மனுக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரம்

சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, அபிராமி அம்மன் பலவண்ணப் புதுமலர்களாலும், தங்க ஆபரணங்களாலும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்புத் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனின் அருள்மிக்கத் திருக்கோலம் கண்ட பக்தர்கள் 'அபிராமி தாயே' என எழுப்பிய பக்தி கோஷம் திருக்கோவில் வளாகம் முழுதும் எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து, திருக்கோயில் அஸ்திரதேவர் மற்றும் அபிராமி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புனிதத் தீர்த்தக் குளத்திற்கு (அமிர்த தீர்த்தம்) ஊர்வலமாக வந்தடைந்தனர்.

புனிதக் குளக்கரையில் அஸ்திரதேவருக்குத் பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, வேதமந்திரங்கள் முழங்க புனிதத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அஸ்திரதேவர் குளத்தில் மூழ்கித் தீர்த்தவாரி கொடுத்த அதே தருணத்தில், குளக்கரையில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்களும் புனித நீராடி அம்மனின் அருளைப் பெற்றனர்.

பக்தர்கள் தரிசனம் & விழா ஏற்பாடுகள்

தீர்த்தவாரி முடிந்ததும், மலர் அலங்காரத்தில் மின்னிய அபிராமி அம்மன் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனக் கோயில் நிர்வாகிகள், தலைமை அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தருமபுரம் ஆதீனக் குறுமகாசந்நிதானத்தின் வழிகாட்டுதலின்படி, கோயில் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், ஊழியர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.