மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீனவ கிராமங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலை நம்பி ஏராளமானோர் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கடலோர மாவட்டம் என்பதால் மீன்பிடி சார்ந்த தொழில்களும் இங்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தரங்கம்பாடியில் தனியார் படகு தயாரிக்கும் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அதில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்காவை சேர்ந்த 37 வயதான சந்தோஷ் குமார் என்பவரும், செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் பகுதியை சேர்ந்த 40 வயதான சங்கர் என்பவரும் பெயிண்ட் அடிக்கு வேலை பார்த்து வந்தனர்.
வெளிமாவட்ட தொழிலாளிகள்
இந்த நிலையில் சந்தோஷ் குமார், சங்கர் ஆகிய இருவரும், இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் இருந்து தரங்கம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது மயிலாடுதுறை மாவட்ட எல்லையான நண்டலாறு சோதனை சாவடி அருகே அவர்கள் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தகவல் அறிந்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் பொறையார் காவல்துறையினர் உயிரிழந்த இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.