கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பதிவானது. இந்த திடீர் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவ்வாறு சாய்ந்த மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. இந்த எதிர்பாராத சேதங்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக களமிறங்கினர். இரவு, பகல், மழை, வெள்ளம் என எதையும் பொருட்படுத்தாமல், துரிதமாக செயல்பட்டு மின் விநியோகத்தை சீர்செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.

ஆற்றில் நீந்திச் சென்ற அசாத்திய முயற்சி

மயிலாடுதுறை மாவட்டம், கிடாரங்கொண்டான், கிழையூர் பகுதிகளில் சூறாவளிக் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, செல்லகோவில் பகுதியில் ஆற்று பகுதியோரம் இருந்த உயரழுத்த மின்பாதை மீது மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்தத் தகவல் கிடைத்ததும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக அப்பகுதியின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

மின் கம்பிகளை சரிசெய்ய சம்பவ இடத்திற்கு விரைந்த ஊழியர்கள், ஆற்றுப் பகுதிக்கு அப்பால் இருந்த மின் கம்பங்களை அடைய எந்தவித பாதையும் இல்லை என்பதைக் கண்டனர். ஆற்றுக்குக் குறுக்கே மின் கம்பிகள் சென்றதால், அந்தப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, சவாலை எதிர்கொண்ட ஊழியர்கள், ஆற்றில் இறங்கி நீந்திச் சென்று, கடும் சிரமத்திற்கு மத்தியில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வைரலாகும் வீடியோ - குவியும் பாராட்டுக்கள்

மின்வாரிய ஊழியர்கள் ஆற்றில் நீந்திச் சென்று மின்கம்பிகளை சரிசெய்யும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த அசாத்திய முயற்சியை பொதுமக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். "மழைக்காலத்தில் மின் தடை ஏற்பட்டால் ஊழியர்களை திட்டித் தீர்க்கும் மக்கள், அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூற்றுத்தலும், போற்றுதலும்

பல்வேறு சமயங்களில், மின் தடை ஏற்படும்போது பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகும் மின்வாரிய ஊழியர்கள், இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு, பொதுமக்களின் நலனுக்கானது என்பதை இந்த வைரல் வீடியோ தெளிவாகப் பறைசாற்றுகிறது.

அதிகாரியின் கருத்து 

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழைக் காலங்களில் மின் பராமரிப்பு பணிகள் மிகவும் சவாலாக இருக்கும். ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து மின்சார விநியோகத்தை சரிசெய்வார்கள். பொதுமக்கள் மின் தடையை வெறும் இடையூறாக மட்டும் கருதாமல், அதன் பின்னணியில் உள்ள ஊழியர்களின் உழைப்பையும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார். சீரான மின் விநியோகத்திற்காக தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் மின் ஊழியர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுவோம். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் நமது அன்றாட வாழ்க்கையை ஒளியுடன் வைத்திருக்க உதவுகிறது.