மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்த சிஎன்ஜி கேஸ் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்து சம்பவம் சக ஆட்டோ ஓட்டுனர்களுக்கிடையே பேரும் அச்சத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
சிஎன்ஜி வாகனங்கள்
தமிழ்நாட்டில் வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்றுமாசு படுவதை தவிர்க்கும் வகையில் எலெக்டரிக்கல் பைக் மற்றும் இயற்கை அழுத்த எரிவாயு (சிஎன்ஜி) கேஸ் பயன்படுத்தி ஆட்டோக்கள் மற்றும் கார்கள் இயக்கும் முறை நடைமுறையில் உள்ளது. மேலும் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுருக்கமாக சிஎன்ஜி என அழைக்கப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை வரிவாயு குறைந்த விலையில் கிடைப்பதால், மக்கள் நிறைய பேர் சிஎன்ஜி வாகனங்களை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் ஓடும் 1000 சிஎன்ஜி ஆட்டோக்கள்
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சிஎன்ஜி கேஸில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு கேஸ் பிடிப்பதற்கான பங்குகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் லட்சுமிபுரம், மற்றும் சேத்திரபாலபுரம் ஆகிய 2 பகுதிகளில் மட்டுமே உள்ளது. தற்போது சிஎன்ஜி கேஸ் நிரப்புவதற்கு லட்சுமிபுரத்தில் உள்ள பங்கில் 300 கிலோ கொள்ளவும், சேத்திரபாலபுரத்தில் உள்ள பங்கில் 600 கிலோ கொள்ளவும் உள்ளது. இதனால் போதுமான சிஎன்ஜி கேஸ் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தீப்பற்றிய சிஎன்ஜி ஆட்டோ
இந்நிலையில் மயிலாடுதுறையில் அரசு பெரியார் மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்த சிஎன்ஜி கேஸ் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. சுந்தர் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் எலந்தங்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஓட்டுநர் கார்த்தி, மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக இறக்கிவிட்டு, திரும்பிச் சென்றுள்ளார்.
அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஆட்டோ ஓட்டுனர்
அப்போது மருத்துவமனைக்கு எதிரில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது. ஆட்டோவில் தீ பற்றியதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி உடனடியாக சாலையின் ஓரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தூரமாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சிறிது நேரத்தில் ஆட்டோவின் வெளிப்பாகம் முழுவதும் எரிந்து உருக்குலைந்தது. இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு முன்னதாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அச்சத்தில் சிஎன்ஜி ஆட்டோ ஓட்டுநர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சுமார் 1,000 ஆட்டோக்கள் இயங்கிவரும் நிலையில், ஏற்கெனவே சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கேஸ் நிரப்புவதற்காக அருகாமையில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது. இந்த சூழலில், பாதுகாப்பானது என கூறப்பட்ட சிஎன்ஜி கேஸ் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம், சக சிஎன்ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.