மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கொற்கை கிராமத்தில் நடைபெற்ற காதுகுத்து விழாவில் கோயில் ஆலமரத்தில் கூடுகட்டிருந்த கதண்டு வண்டுகள் கொட்டியதில், 10 சிறுவர்கள் உட்பட 37 பேர் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதண்டு வண்டுகள்
கதண்டு என்ற கொடிய விஷவண்டு அதிகஅளவில் காட்டுப்பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் பாழடைந்த கட்டங்களில் இவைகள் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து தாக்கும் குணம் கொண்டது. ஒருவரை 5 -க்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிழக்க செய்யும். சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும்.
தொடரும் தாக்குதல்
வண்டுகள் இனத்தில் கொடிய விஷமுள்ள இந்த வண்டுகள் கூடுகட்டியிருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தால், அதை உடனடியாக தீயணைப்பு துறையினர் அழித்துவிடுவர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி பனைமரங்களில் உள்ள கதண்டுகள் அழிக்கப்பட்டு வந்தாலும், கதண்டு விஷவண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அவ்வப்போது வந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.
மீண்டும் கதண்டு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அருகே அமைந்துள்ளது கொற்கை கிராமம். அக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது குழந்தைகளுக்குக் காதுகுத்து விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கொற்கை மாரியம்மன் கோயிலில் திரண்டிருந்தனர். விழா சடங்குகளின் ஒரு பகுதியாக, அம்மனுக்குப் படையல் இடுவதற்காக, கோயில் வளாகத்தில் இருந்த ஒரு மிகப் பெரிய ஆலமரத்தடியில் அடுப்பு மூட்டிப் பொங்கல் வைத்துள்ளனர்.
அப்போது அடுப்பில் இருந்து எழுந்த புகை, மரத்தில் இருந்த கதண்டுகளின் கூட்டைக் கலைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கதண்டுகள், திடீரெனக் கூட்டமாக வெளியேறி, அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கதண்டுகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால், அதற்குள் பலருக்குக் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் கதண்டுகள் கொட்டியுள்ளது.
37 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தத் தாக்குதலில், 10 சிறுவர்கள் உட்பட 37 பேருக்குக் கதண்டுகள் கொட்டியதில் வீக்கமும், கடுமையான வலியும் ஏற்பட்டது. இதனை அடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரையும் மீட்டு உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சிகிச்சைகாக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சை மருத்துவர்கள் வழங்கப்பட்டன. இதில், லேசான காயமடைந்த 7 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், கடுமையான வீக்கமும், வலியும் இருந்ததால், மீதமிருந்த 30 பேர் ஒரு நாள் மருத்துவமனையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவர்கள் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் குழுவினர் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கதண்டுகள் கொட்டியதால் ஏற்பட்ட வலி மற்றும் அச்சம் காரணமாக, காதுகுத்து விழாவிற்கு வந்திருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். விழா இனிமையாக நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தகைய எதிர்பாராத நிகழ்வு, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்பது ஆறுதலான செய்தியாகும்.
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்
கோயில்களில் அல்லது திறந்தவெளியில் இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது, பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. குறிப்பாக, மரத்தடியில் அல்லது பிற இயற்கை அமைப்புகளுக்கு அருகில் நெருப்பு மூட்டுவதற்கு முன், அங்கிருக்கும் பறவைக் கூடுகள், தேனீக் கூடுகள் அல்லது கதண்டுகளின் கூடுகள் போன்றவற்றைச் சரிபார்த்து உறுதி செய்வது முக்கியம். மக்களின் அலட்சியம் அல்லது கவனக்குறைவு, இது போன்ற எதிர்பாராத விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தநிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.